தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியை ஒதுக்க, இந்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் வேறுபல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மணிப்பூர் நிலவரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதேபோல், 2024-ஆம் ஆண்டில் திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவுகள், சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பீகார், இமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் பீகார் மாநிலத்திற்கு ரூ.588.73 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடி ஒதுக்க அனுமதி தரப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டிற்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.33.06 கோடியும் வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மூன்று மாநிலங்களுக்கு ரூ.1247.29 கோடி மத்திய உதவியாக வழங்க உயர்மட்ட பொறுப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.