இந்திய யூனியன் பிரதேசங்களாகவுள்ள லட்சத்தீவுக்கு பாஜகவை சேர்ந்த பிரபு கோடா பட்டேல், நியமிக்கப்பட்டதன் பின்னதாக அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பில், லட்சத்தீவு மக்களிடையே பெரும் அதிருப்தி மற்றும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் அவர்கள் புதிய திட்டங்களுக்கு எதிராகக் கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக நடிகர் பிரித்விராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது லட்சத்தீவில் நடைபெறும் பிரச்னைகள் குறித்து அம்மக்கள் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்தவகையில், அங்கு அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் நிச்சயம் அங்குள்ள மக்களுக்கு ஏற்றதல்ல என்பதுதான். இந்தப் பிரச்னையைப் பற்றி அந்த மக்களிடம் அரசு கேட்க வேண்டும்” என்று லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார்.
அவருடைய இந்தப் பதிவிற்கு பாஜகவினர் பலரும் கண்டனங்களும், விமர்சனமும் தெரிவித்து வந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “ பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வு நமது சமூகத்தின் உணர்வு. இது கேரளாவில் வாழும் எவருக்கும் இயல்பாக வரும் ஒரு உணர்வு. பிரித்விராஜ் அதனை சரியான வழியில் வெளிப்படுத்தியுள்ளார். அவரைப்போலவே, பலரும் தங்கள் கருத்தைக்கூறி முன்வர தயாராக வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.