தமிழகத்தை உலுக்கிய கோவை மாவட்டம் பொள்ளாச்சி,கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகிய, சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
9 பேரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து தீர்ப்பளித்த நீதிபதி நந்தினி தேவி, 9 பேருக்குமே சாகும் வரை ஆயுள் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.பலமான அரசியற் பின்னணி உள்ள குற்றவாளிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இந்த வழக்கினை, கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வருகையில் அரசியல் அழுத்தங்களால் அவருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டிருந்தது. பின் உயர் நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.