இந்தியாவில் 82 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டலில், 'தக்காளி காய்ச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் (காய்ச்சல், சோர்வு, உடல் வலிகள் மற்றும் தோலில் தடிப்புகள்) போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு அல்லது சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல' என கூறியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், 'காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் உள்ள குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, தொடவோ வேண்டாம் என்று குழந்தைகளுக்கு சொல்லுங்கள். விரல் உறிஞ்சும் பழக்கத்தை நிறுத்த குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். மூக்கு ஒழுகுதல் அல்லது இருமல் ஏற்பட்டால் கைக்குட்டையைப் பயன்படுத்த குழந்தையை ஊக்குவிக்கவும்' என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
குழந்தைகளின் தோலை சுத்தம் செய்யவோ அல்லது குளிக்கவோ எப்போதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ளுமாறும், போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.