இந்தியாவிலுள்ள இமயமலை மாநிலமான உத்தரகாண்டில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க இந்திய மீட்புப் படையினர் ஒன்பது நாட்களாக போராடி வருகின்றனர்,
வட இந்தியாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் பல்வேறு கட்டங்களாகத் தொடரப்பட்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்த போதும், நேற்றுத் திங்கட் கிழமை மாலை, இடிபாடுகளுக்குள்ளாகச் செலுத்தப்பட்ட 6 அங்குல (15.24 செமீ) குழாய் வழியாக அரிசி மற்றும் பருப்புகளால் செய்யப்பட்ட உணவுகள் அனுப்பப்பட்டன என்று அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒன்பது நாட்களாக, ஒரு குறுகிய குழாய் மூலம் அனுப்பப்படும் உலர் உணவை உண்டு தொழிலாளர்கள் உயிர் பிழைத்தனர். அவர்களுக்கு தனி குழாய் மூலம் ஆக்சிஜனும் வழங்கப்பட்டு வருகிறது.
மீட்புப் பணியில் தொய்வுகள் ஏற்பட்டதால் தொழிலாளர்களது குடும்பத்தினர் கவலையும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில், இன்று செவ்வாயன்று அதிகாரிகள் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பது தொடர்பில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதே நேரத்தில் தரையில் மீட்பவர்களுடன் வாக்கி-டாக்கிகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையிலும் அவர்கள் உள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.