பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அதனை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
தொடர்பாகவும், அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது
என்றும், தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக
பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.