இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில், வக்பு சட்ட திருத்த மசோதாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசு நிறைவேற்றி உள்ளது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
எனினும் கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் வக்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான விவாதம் இரு அவைகளிலும் நள்ளிரவை கடந்து நடைபெற்று அதன் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசின் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிய சேர்ந்த எம்.பி. முகமது ஜாவேத், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டம், இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பாகுபாட்டுடன் அமைந்துள்ளது.
மேலும், இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மசோதா உள்ளது. இந்தச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவுகள் 14 (சமத்துவம்), 25 (மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம்), 26 (மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்), 29 (சிறுபான்மை உரிமைகள்) மற்றும் 300A (சொத்துரிமை) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியும், வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த சட்டத்திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது; இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக, அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும், வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளது.