தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை சிபியை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ், வயது 32. இவர், கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார். மார்ச் 3ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்தபோது ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் , ரன்யாவை கைது செய்தனர்.
ரன்யா ராவின் பெங்களூரு வீட்டில் நடத்திய சோதனையில் 2.67 கோடி இந்திய ரூபாயும், 2.06 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. இதனிடையே, சிறையில் உள்ள ரன்யா ராவ், தனக்கு பிணை வழங்க வேண்டுமென்று கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மனு செய்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதோடு, அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கும் அனுமதி தரப்பட்டது.
நடிகை ரன்யாவிடம் வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையில், 45 நாடுகளுக்கு அவர் சென்று வந்ததும், அதிகபட்சமாக துபாய்க்கு 27 முறை சென்று வந்ததும் தெரியவந்தது. சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்த சூழலில் நடிகை ரன்யா ராவ் மீது, மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகள் தொடர்பு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் இணைந்து விசாரிக்க சிபிஐ முடிவெடுத்துள்ளது.
மேலும் ரன்யா ராவின் தந்தை ராமச்சந்திர ராவிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.