மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதியில் 9 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எனினும் விவசாயிகளின் கோரிக்கையான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்து வருகிறது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த ஓராண்டு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தன. இந்த பேராட்டம், நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மற்றும் தனிப்பட்ட அவசரநிலைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் உள்ளிட்ட அனைத்து அவசரகால நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கோவையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று காலை 10.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் முன்பு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொள்கின்றன.