கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் கடந்த 20ம் திகதி பொன்குமார் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் பொன்முடியும் பல்வேறு திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் திமுகவினரை வரவேற்பதற்காக சாலை ஓரங்களில் உயரமான கொடி கம்பங்கள் நடப்பட்டன. இந்த அலங்கார பணியில் ஈடுபட்டு வந்த 13 வயதான சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.
சாலை ஓரத்தில் தினேஷ் கொடியை நடும் போது மேலே சென்ற மின்சார கம்பியில் கொடி கம்பம் சிக்கி தினேஷ் உடலில் மின்சாரம் தாக்கி பலியானார். உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் தூக்கியடிக்கப்பட்ட தினேஷ் உடலில் காயம்பட்டு பலியானார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் தினேஷ் மரணத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்விட்டில், "கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.