தமிழ்நாடு முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த மாட்டு வண்டித் தொழிலாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
கரூா் மாவட்ட மணல் மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாநில துணைச் செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவா் ப.சரவணன் ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு தடை விதித்துள்ளதால் மாட்டு வண்டித் தொழிலாளா்கள் வேலையின்றி, அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுபோல கரூா் மாவட்ட தொழிலாளா்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மணல் குவாரிகளை திறக்க கரூா் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 25ஆம் திகதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.