இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இன்றைய அறிக்கைப்படி,
கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 806 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 09 லட்சத்து 87 ஆயிரத்து 880ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 581 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,11,989 ஆக உயர்ந்து உள்ளது. ஆயினும் இந்த எண்ணிக்கை வீதம் அன்மைய நாட்களில் தொடர் வீழ்ச்சியாக அமைந்து வருகிறதெனத் தெரிவிக்கப்படுகிறது.
நோய்த் தொற்றின் பாதிப்பு தமிழகத்திலும் சற்று குறைந்து வருவதாக அவதானிக்கப்படும் நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாக அறியவருகிறது. இது தொடர்பில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இச் சந்திப்பில் கல்வித்துறைசார்ந்த பல்வேறு விடயங்களும் ஆலோசிக்கப்படும் எனவும், பெறப்படும் கருத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.