பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது
இந்தத் தேர்தலில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி சாதனை படைத்துள்ளது. இந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் அபார வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை, டெல்லியில், ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது பதவி ஏற்பு திகதி குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வரும் 16 ஆம் திகதி புதன் கிழமை, பஞ்சாப் மாநில முதலமைச்சராக, ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மன் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர் காலனில் தான் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, பகவந்த் மன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையே, வரும் 13 ஆம் திகதி அமிர்தசரசில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், பகவந்த் மன் சாலைப் பேரணி நடத்த முடிவு செய்துள்ளார்.