உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 100,000 பேர் போரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடி அகதிகளாகியுள்ளார்கள் என ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு பாரிய மற்றும் கடுமையான விளைவுகளைத் திணிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ஐரோப்பிய கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளது. பொருளாதாரத் தடைகள், நிதி, எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகள், பொருட்கள் மற்றும் நிதி ஏற்றுமதி, விசா கொள்கை மற்றும் கருப்பு பட்டியலில் சேர்த்தல் என்பவற்றை ரஷயா மீதான தடைகளாக அறிவிக்கவுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பெலாரஸ் மீதும் புதிய தடைகளை அறிவித்துள்ளனர்.
இதேவேளை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய எச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. தேசிய எச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதன் காரணமாக, அடுத்த சில நாட்களில் பொது இடங்களில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் இருப்பதை மக்கள் உணர முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இராணுவ நோக்கங்களுக்காக தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து திறனை அனுமதிக்கும் போக்குவரத்து சுழற்சி கட்டுப்பாடுகளும் இதன் அடிப்படையில் விதிக்கப்படலாம்.
ஐ.நா. அகதிகள் அமைப்பின் மதிப்பீடுகளின்படி, ஒரு இலட்சம் மக்கள் "தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வன்முறையில் இருந்து தப்பி ஓடுகின்றனர். நாட்டிற்குள் குறிப்பிடத்தக்க இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. சிலர் எல்லைக்குள் நகர்ந்தனர், மற்றவர்கள் எல்லைகளைத் தாண்டினர். ஆனால் நிலைமை இன்னும் குழப்பமாகவும், வேகமாகவும் மாறி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, 7,000 அமெரிக்க துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. சமீபத்திய நாட்களில், எஸ்டோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியாவில் பல அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்துவதாக பிடன் அறிவித்திருந்தார். இவர்களுடன் போலந்து மற்றும் ருமேனியாவில் மேலும் 7,000 துருப்புக்களை நிலைநிறுத்த அமெரிக்க பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டார்.
இந்தப் போர் தொடங்கப்பட்டதைக் கண்டித்து, ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் ரஷ்யய மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,400 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 51 நகரங்களில் போராட்டங்கள் ஏற்பட்டதாகவும், மாஸ்கோவில் மட்டும் 719 பேர் கைதாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.