சுவிற்சர்லாந்தில் அக்டோபர் 1ந் திகதி முதல் இலவச கோவிட் பரிசோதனைகள் நிறுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. அரசியற்கட்சிகள் சில இந்த அறிவிப்புக்கு எதிர்வினையாற்றியிருந்தன.
அதனைத் தொடர்ந்து இந்தத் திகதி எதிர்வரும் 10ந் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 10 ம் திகதி முதல் சுவிஸ் அரசாங்கம், தனிப்பட்ட கோவிட் சோதனைகளுக்கான செலவுகளை வழங்காது. ஆனால் இதில் சில விதி விலக்குகளும் உண்டு.
அக்டோபர் 10 ந் திகதி முதல் கோவிட் அறிகுறிகள் உள்ளவர்களாகக் கருதப்படுபவர்களுக்கு, பரிசோதனை இலவசமாக இருக்கும். அவர்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிகுறிகள் உள்ளவர்களாக இருந்தால், பரிசோதனை இலவசமாக இருக்கும். ஆயினும் இந்தச் சோதனை முடிவை, தடுப்பூசி போடத ஒருவர் கோவிட் சான்றிதழில் சேர்க்க அவற்றைப் பயன்படுத்த முடியாது. அதேவேளை தடுப்பூசி போட முடியாத உடல்நிலை உள்ளவர்களுக்கு இலவச சோதனைகளுக்கான உரிமை தொடர்ந்தும் வழங்கப்படும். இவர்களது சோதனை முடிவுகள், அவர்களுக்கான கோவிட் சான்றிதழில் சேர்க்கப்படலாம்.
அரசாங்கம் இலவச பரிசோதனையை முடிக்க விரும்புவதற்கான முக்கிய காரணம் மக்களை தடுப்பூசி போடுவதை ஊக்குவிப்பதாகும். அதேவேளை இலவச சோதனைகளுக்காகச் செலவிடப்படும் பெருந்தொகைப் பணத்தினை மட்டுப்படுத்துவதும் ஒரு முக்கிய நோக்கமாகும். இலவச சோதனைகளுக்கான செலவு, நாளொன்றுக்கு நான்கு மில்லியன் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கோவிட் சான்றிதழ் தேவை என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும், 2022 ஜனவரி 24,ந் திகதி வரையில், அரசாங்கம் சோதனைகளை இலவசமாக வழங்குவதாக இருந்தால், மத்திய அரசுக்கு சுமார் 770 மில்லியன் பிராங்குகள் செலவாகும் என மதிபிடப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 10 ந் திகதி முதல் இலவச சோதனைகள் நிறுத்தப்படும் போது, கோவிட் சோதனைகள் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு முறையும் 40 முதல் 50 பிராங்குகள் வரை செலவிட வேண்டியிருக்கும். இதேவேளை சுவிஸ் பணியிடங்களில், கட்டாய தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கு 61% மக்கள் எதிர்ப்பாகவும், 34% மக்கள் ஆதரவாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.