சுவிற்சர்லாந்தில் தற்போது கொரோனா வைரஸ் மட்டுமன்றி, பிற தொற்று நோய்களும் நாடு முழுவதும் பரவி வருவதாக அறியவருகிறது.
இந்த வைரஸ் தொற்றுக்கள் பெரும்பாலும் குழந்தைகளை பாதிப்பதாகவும், நுரையீரல் மற்றும் நாசிப் பாதையில் உள்ள காற்று குழாய்களைத் தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான தொற்றுக்களின் அதிகரிப்பு காரணமாக, ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனைகள் (HUG) மற்றும் சூரிச்சில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை உட்பட பல சுவிஸ் மருத்துவமனைகளில் உள்ள குழந்தை பிரிவுகள் நிறைந்துள்ளன எனவும் தெரியவருகிறது.
இந்த பருவகால வைரஸ்கள் அசாதாரணமானது அல்ல என்றாலும், சமீப காலத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்தில் சமீபத்திய ஆண்டுகளில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆயினும் இந்த நோயால் இறக்கும் ஆபத்து தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.
சுவிஸ் மத்திய புள்ளியியல் அலுவலகம், மற்றும் சுவிஸ் தேசிய புற்றுநோய் பதிவு அலுவலகம் என்பன வெளியிட்டுள்ள, புற்றுநோய் அறிக்கை 2021 ல் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையில், புற்றுநோய் தொடர்பான இறப்பு விகிதங்கள் சராசரியாக பெண்களுக்கு 28 சதவிகிதம் மற்றும் ஆண்களுக்கு 39 சதவிகிதம் என்னும் புள்ளிவிபரங்கள், இறப்பு வீதம் குறைந்துள்ளன என்பதைக் குறிக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 17,000 இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் புற்றுநோயாக உள்ள போதில், இறப்பு வீதம் குறைந்திருப்பதான செய்தி ஆறுதல் தருகிறது.
சுவிற்சர்லாந்தைப் போன்ற ஒன்பது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பெண்களுக்கான சுவிஸ் இறப்பு விகிதம் மிகக் குறைவு மற்றும் ஆண்களுக்கு இரண்டாவது மிகக் குறைவான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.