சுவிற்சர்லாந்தின் தென்பகுதியை நேற்றுப் பலமாகத் தாக்கிய கன மழையில் பெரும்பாலன சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பலமாகத் தாக்கிய கன மழையில் திடீரெனச் சாலைகளில் பெருவெள்ளம் தோன்றியது.
கடந்த 72 மணி நேரத்தில் சில இடங்களில் சதுர மீட்டருக்கு 350 லிட்டர் தண்ணீர் தேங்கியதாக வானிலை அவதான நிலையப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மெண்ட்ரிசியோட்டோ பிராந்திய தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை முதல் மோசமான வானிலை அவசரநிலையை சமாளிக்க கடுமையாகப் போராட வேண்டியிருந்தாகக் குறிப்பிட்டனர். கடந்த காலங்களில் கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்டதைப் போன்று அவரசரகால குழுக்களாக செயற்பட வேண்டியிருந்தது. தீயணண்ப்புப படையின் துணைத் தளபதி ஆல்பர்டோ செரோனெட்டி மூன்று அலாரம் குழுக்கள் எப்பொழுதும் போலவே திட்டமிடப்பட்டுசெயற்பட்டதாகவும், இன்று காலை 7 மணியளவில் நாங்கள் நிலைமையைச் சமாளிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆயினும் ( MeteoSwiss) சுவிஸ் காலநிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை நிலை 3 (குறிக்கப்பட்ட ஆபத்து) இன்று மாலை 6 மணி வரை உள்ளது. பல இடங்களில் சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு அபாயங்களும் விடப்பட்டுள்ளன. மொன்தே ஜெனரோசோ மலைக்கான ரயில்சேவை நாளை வரை ) செயல்பாட்டை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெருமழையினால் பெருமளவு விவசாய நிலங்களின் அறுவடை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களிலும், நன்னீருடன் அசுத்த நீர் கலந்துள்ளதால், பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பாவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.