ஜேர்மனியில் உள்ளூருக்குள் ஒரு மாத காலத்திற்கு பிராந்திய போக்குவரத்துக்களில் உள்ள பேருந்து, ரயில் மற்றும் டிராம் மூலம் பயணிப்பதற்கான மொத்தக் கட்டணத்தை 9 யூரோக்களுக்கு வழங்கும் புதிய சலுகைத்திட்டமொன்றினை அரசு அறிவிக்கின்றது.
ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு இத் திட்டம் நடைமுறையில் இருக்கும். நாட்டில் ஏற்பட்டுள்ள சுழல் பணவீக்கத்திற்கு மத்தியில், ஜேர்மன் குடியிருப்பாளர்களுக்கு வழங்கும் சேவையாகவும், கோடைகாலநிலைக்கு ஏற்ப மோட்டார் கார் பாவனையாளர்களை மாற்றியமைக்கவும், சுற்றுச் சூழல் மாசடைதலைத் தவிர்ப்பதற்காகவும், எடுக்கப்படும் ஒரு முன்னோடி முயற்சியாக இது அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஜெர்மன் கூட்டாட்சி பாராளுமன்றம், இதற்கான நிதியளிப்பு அம்சத்தில் இறுதி முடிவை எடுத்து, இன்று வெள்ளிக்கிழமை அது 16 மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலஅவைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறியவருகிறது.
கோடை காலநிலைக்கு ஏற்ற ஒரு சிறந்த போக்குவரத்து வாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை காரணமாக, பேருந்துகள் மற்றும் ரயில்கள் என்பவற்றில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என எச்சரிக்கையும் எழுப்பட்டுள்ளது. ஆயினும் குறைந்த வருமானம் உள்ளவர்கள் இந்தச் சலுகையால் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பாலர்க்கப்படுகின்றது.
ஜேர்மனியில் மாதாந்திர அல்லது வருடாந்திர டிக்கெட்டுக்கான அபோ என அழைக்கப்படும் சந்தா டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்தச் சலுகை கிடைக்கும். இதனால் மேலதிகமான பணத்தினைச் செலுத்திய அனைவரும், மீதிப் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். இந்தச் சலுகைப் பயணச்சீட்டு, நீண்ட தூர ரயில்கள் அதிவேக ICE போன்றவற்றுக்கு உபயோகிக்க முடியாது.
9 யூரோ டிக்கெட் தொடர்பில் மத்திய அரசு, மத்திய மாநிலங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் சங்கங்களுக்கு இடையேயான இறுதி ஒருங்கிணைப்பு தற்போது நடந்து வருகிறது. ஃபெடரல் கவுன்சில் 9 யூரோ டிக்கெட்டுக்கு மே 20, 2022 இன்று ஒப்புதல் அளித்தால், மே மாத இறுதியில் இந்த டிக்கெட் விநியோகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.