இத்தாலியில் இருந்து ரஷ்யத் தூதுவராலய அதிகாரிகள் 30 பேரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக 30 ரஷ்ய தூதர்களை இத்தாலியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் லூய்கி டி மாயோ இன்று காலை தெரிவித்துள்ளார். "எமது தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்காக இந்த நடவடிக்கை அவசியமானது" என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
உக்ரைன் போர்ச் செய்திகளில் நேற்று வெளியான புக்சா நகர மனிதப்படுகொலை தொடர்பான படங்கள் ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இத்தாலி இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் ஆரம்பகாலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தாலியைக் கண்டு கொள்ளாதிருந்த நிலையில், ரஷ்யா இத்தாலிக்கு உதவ முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.