சுவிற்சர்லாந்தில் இப்போது வரை மழைப்பொழிதல் சார்ந்தே காலநிலை இருந்து வருகிறது. ஆயினும் இந் நிலைமாறி வெப்பநிலை தோன்றும் போது அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கவனத்திற் கொண்டு மத்திய கூட்டாட்சி அலுவலகம், மத்திய சுகாதாரத்துறை அலுவலகம், சுற்றுச் சூழல்அலுவலகம், மத்திய வானிலை அலுவலகம் என்பன இணைந்து, வெப்பமான நாட்களில் பொதுமக்கள் கவனம் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து ஒரு துண்டுப்பிரசுரத்தினை வெளியிட்டுள்ளன.
வெப்பமான நாட்களில் கவனம் கொள்ள வேண்டி மூன்று விடயங்கள் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அத்துண்டுப்பிரசுரத்தில், உடல், சூழல், உணவு, என்னும் விடயங்களில் கொள்ள வேண்டிய விடயங்களை அறிவுறுத்தியுள்ளார்கள்.
கூடுமானவரையில் நிழல்சார்ந்த இடங்களில் , அல்லது நிழற்குடைகளின் கீழ் தங்குதல்.
உடலுழைப்பின் பின்னரான வியர்வை வெளியேற்றத்தின் பின், உப்புச் சேர்ந்த உணவு மற்றும் நீராகாரம் நல்லது.
வெளியே செல்லும் போது, உடலை மூடிய ஆடைகள், சூரியகதிர் எதிர்ப்பு கிறீம் வகைகளை தவறாது உபயோகித்தல்.
வீட்டின் ஜன்னல்களை மூடி வைத்தல், குளிர்ந்த நீரில் குளித்தல், ஈரமாக்கியதுணிகளை உடலில் போர்த்திக் கொள்ளல்.
மெல்லிய ஆடைகளையும், இயற்கை முறையிலான பருத்தி ஆடைகளையும் அணிதல்.
இனிப்பு, மதுபான வகைகள் தவிர்த்தலும், நாளொன்றுக்கு குறைந்தது 1.5 லீட்டர் நீர் அருந்துதல்.
கொழுப்புச் சத்து உணவுகளைத் தவிர்த்து, நீர்சத்து மிகுந்த காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளல்.
மருந்து வகைகள் பாவிப்பவர்கள் இக்காலத்திற்கான சரியான அளவிலான மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் பிரகாரம் பெற்று உட்கொள்ளல். என்பன கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என அத் துண்டுப்பிரசுத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்பட்ட நோயாளர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள், பிறந்த குழந்தைகள், கர்ப்பினிப் பெண்கள் ஆகியோர் இந்த விடயங்களில் அதீத கவனம் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.