இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், பொருளாதார நிபுணராகவும் இருந்த பிரதமர் மாரியோ டிராகி தனது பதவியை இன்று ராஜினாமாச் செய்தார். 2021 பிப்ரவரியில் அவர் பதவியேற்றபோது அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இது தவிர ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 ஆகிய அமைப்புக்களின் மரியாதைக்குரிய தலைவராகவும், சர்வதேச அரங்கில் இத்தாலியின் சுயகௌரவத்தை உயர்த்தும் தலைவராகவும் காணப்பட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் பொருளாதார மந்தநிலையின் பின்விளைவுகளைக் கையாள்வதுடன், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க பில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்புள்ள ஐரோப்பிய ஒன்றிய மீட்பு நிதியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்தும் முக்கிய பணி அவரிடமிருந்தது.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் திட்டமிடப்பட்ட நிலையில், அவரது கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே முரண்பாடுகள் வெடிக்கத் தொடங்கின. இதனால் நேற்றுப் புதன்கிழமை அவரது கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க மறுத்து, அரசாங்கத்தை பலமிழக்கச் செய்தன.
இதனால் பிரதமர் டிராகி தனது ராஜினாமா கடிதத்தை இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லாவிடம், இன்று வியாழக்கிழமை காலை கையளித்தார். கட்சிகளிடையே ஒருமித்த கருத்தைப் பேணுவதற்காக "நொண்டி சமரசங்களை" ஏற்காத ஒருவர் டிராகி. அவரது இந்த பதவி விலகல் இத்தாலியின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.