சுவிற்சர்லாந்தில் குளிர்கால நிலை தொடங்கும் வேளையில், கோவிட் வைரஸ் தொற்று வீதமும் அதிகரித்துக் காணப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற மத்திய கூட்டமைப்பு அரசின் வாராந்திரப் பத்திரிகையாளர் சந்திப்பில், சுவிஸ் மருத்துவத்துறை வல்லுநர்கள், வைரஸின் இனப்பெருக்கம் விகிதம் அதிகரித்து வருவதாக எச்சரித்தனர். உண்மையில், சமீபத்திய நாட்களில் கோவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன என்பதை இன்று மத்திய சுகாதாலர அலுவலகம் (FOPH) வழங்கிய தரவுகள் அதனை உறுதிப்படுத்துகிறது.
நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் சுவிஸ் முழுவதிலும், 1,442 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டதாகவும், இவற்றில் 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஐந்து பேர் இறந்துள்ளனர் எனவும் இன்றைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் முழுவதும் தடுப்பூசி விகிதம் 62.47%ஐ எட்டியுள்ளது. ஆனாலும் சுவிற்சர்லாந்தின் மாநிலங்களுக்கிடையிலும், பல்வேறு பகுதிகளுக்கு இடையேயும், வலுவான வேறுபாடுகள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட 24,926 சோதனைகளின் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளதாக FOPH தெரிவித்துள்ளது. இவற்றில் நேர்மறை விகிதம் 5.79%. கடந்த இரண்டு வாரங்களில், மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 12,758 ஆகும். கடந்த 14 நாட்களில் 100,000 மக்களுக்கு 147.58 வழக்குகள் உள்ளன. இவற்றினடிப்படையில் சுமார் பத்து நாட்கள் தாமதமாக இருக்கும் இனப்பெருக்கம் விகிதம் 1.00 ஆக உயரும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.