தொழில்நுட்ப உலகத்தில் ஜாம்பவான் மைக்ரோசாஃப்ட், விண்டோஸ்10 தங்களின் கடைசி இயக்க முறைமை (operating system) என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். இருந்த பொழுதிலும்
அந்த தகவலானது பொய்யாகுவதற்கான சாத்தியப்பாடுகள் தற்போது உருவாகியுள்ளன. மேலும் புதிய இயக்கமுறைமை வெளிவருவதற்கான சில தகவல்கள் நம்மிடையே பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி panos panay அவர்களின் ட்விட்டரில் போடப்பட்ட ஒரு ட்வீட், விண்டோஸ்11 இற்கான ஒரு துப்பாக அமைந்தது. மேலதிகமாக யூடூபில் போடப்பட்ட 11 நிமிட காணொளி மேலும் இத்தகவலை உறுதி செய்தது. விண்டோஸ்11 வெளியிடப்படுவதற்கு திகதி அறிவிக்கப்படாத போதிலும் இம்மாதம் 24-ஆம் திகதி நேரடி நிகழ்ச்சி ஒன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பதாக அதிகாரபூர்வமற்ற முறையில் சில புகைப்படங்கள் விண்டோஸ்11 தொடர்பாக வெளியிடப்பட்டிருந்தன. இப்படங்களை அடிப்படையாகக் கொண்டு விண்டோஸ்10 மற்றும் விண்டோஸ்11 இற்கிடையில் பாரிய மாற்றங்கள் காணப்படாது எனும் முடிவிற்கு வரலாம். கடந்த வருடம் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மூலம் மின்கலம் (battery) தொடர்பான வரைபுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புகைப்படங்களுக்கு மேலதிகமாக விண்டோஸ்11 பதிப்பு (version) ஒன்றும் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியிடப்பட்டிருந்தது. வெளியான பதிப்பு மூலம் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. ஸ்டார்ட் மெனு (Start menu) திரையின் நடுவில் வடிவமைக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வழமைக்கு மாறாக மூலைகள் வட்டமாக அமையலாம். குரல் மூலமான கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கென ஒரு தனி பகுதி அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்ட தகவல்களின்படி விலையில் பாரிய மாற்றங்கள் இருக்காது என ஊகிக்கலாம்.
இத்தனை தகவல்கள் வெளிவந்த பொழுதிலும் ஜூன் மாதம் 24ஆம் திகதி வரை எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாது.
காத்திருப்போம்…