முந்தைய பாகத்துக்கான இணைப்பு -
நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)
கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம்.
அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.
உதாரணமாக வேறு கிரகங்களில் குடியேற்றங்கள் உள்ளனவா என அவற்றில் இருந்து வெளி வரும் மின்காந்தக் கதிர் வீச்சை கண்காணிப்பதன் மூலம் ஊகித்தல் இதில் ஒரு பகுதியாகும். ஒரு குழுவினர் செவ்வாய்க் கிரகத்திலும், இன்னொரு நிபுணர் குழு வியாழனின் நிலவான யூரோப்பா மற்றும் சனியின் நிலவான என்செலாடுஸ் போன்றவற்றில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான தடயங்களைத் தீவிரமாக ஆய்ந்து வருகின்றனர். ஆனால் SETI இன் பிரதான நோக்கம் விண்வெளியில் தமது இருப்பை வெளிப்படுத்தக் கூடிய (broadcasting) அதிநவீன வளர்ச்சி கொண்ட குடியேற்றங்களைக் (Civilizations) கண்டறிவது ஆகும்.
விண்வெளியில் ஏலியன்களுடனான தொடர்பை மேற்கொள்ள வானியலாளரான பிராங் டிரேக் முதலாவது குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டு 60 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை நாம் உறுதிப் படுத்தப் பட்ட ஏதாவது ஒரு தனித்த சமிக்ஞையைக் கூட ஏலியன்களிடம் இருந்து பெறவில்லை. ஆனால் இன்றிருக்கும் தொழிநுட்பம் வளர்ந்து வந்த வேகத்தைக் கருத்தில் கொண்டால் விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுடன் நாம் தொடர்பை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகரித்துள்ளன.
1960 இல் பிராங் டிரேக் மேற்கு வேர்ஜினியாவில் (அமெரிக்கா) இருந்து 85 அடி நீளமான ரேடியோ தொலைக் காட்டி மூலம் பிரபஞ்சத்திலுள்ள எண்ணற்ற வானொலி அலைகளில் ஏலியன்களின் சமிக்ஞை ஏதும் கிடைக்கின்றதா என ஆய்வு செய்தார். 1420 Mhz அதிர்வெண் கொண்ட இந்த ரோடியோ தொலைக் காட்டி பூமிக்கு அருகே இருக்கும் சூரியனுக்கு ஒப்பான நட்சத்திரங்களை நோக்கியவாறு திசை திருப்பப் பட்டது. இதனை ஒஸ்மா செயற்திட்டம் (Project Ozma) என அழைத்தனர். இந்த செயற்திட்டத்தில் இவர் தோல்வியடைந்த போதும் அடுத்த வருடமே 1961 இல் இம்முயற்சியின் பலனாக முதலாவது SETI மாநாடு நடைபெற்றது.
இதில் ஏலியன்களைக் கண்டு பிடிக்கும் சாத்தியத்தை பிரதிபலிக்கும் மிகவும் எளிமையான Drake Equation என்ற கணித சூத்திரத்தையும் பிராங் டிரேக் அறிமுகப் படுத்தினார். இந்த சூத்திரத்துக்கு ஒரு உறுதிப் படுத்தப் பட்ட விடை கிடையாது. ஆனால் இது எமது அண்டத்தில் நாம் கண்டுபிடிக்கக் கூடிய எல்லாக் குடியேற்றங்களது எண்ணிக்கை தொடர்பில் எவ்வாறு விவரணப் படுத்துவது என்ற ஒரு சித்திரத்தை அளித்தது.
பிராங் டிரேக் இன் புகைப்படம் மற்றும் சமன்பாடு :
இதில் N ஆனது மனிதர்களால் தொடர்பை மேற்கொள்ளக் கூடிய பிரபஞ்சக் குடியேற்றங்களின் எண்ணிக்கை ஆகும். R ஆனது நட்சத்திரங்களது சராசரி உருவாக்க வீதமாகும். fp ஆனது கிரகங்களைக் கொண்டிருக்கக் கூடிய நட்சத்திரங்களின் பின்னமாகும். ne ஆனது உயிர் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய கிரகங்களின் சராசரி எண்ணிக்கை ஆகும். fl ஆனது உயிர் வாழ்க்கையை உருவாக்கியுள்ள கிரகங்களின் பின்னமாகும். fi ஆனது இந்த கிரகங்களில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களை உருவாக்கியிருக்கும் கிரகங்களின் பின்னமாகும். fc ஆனது இந்த அறிவுத்திறன் மிக்க உயிரினங்களில் தகவல் தொடர்பை அபிவிருத்தி செய்திருக்கும் குடியேற்றங்களின் பின்னமாகும். L ஆனது இந்த குடியேற்றங்கள் எம்முடன் தொடர்பை ஏற்படுத்த தேவையான காலத்தின் சராசரி அளவாகும்.
இன்றும் SETI ஆய்வாளர்களால் பயன்படுத்தப் படும் இந்த எளிய சமன்பாட்டின் விடை 1 என அதாவது எமது அண்டத்தில் நாம் மனிதர் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக உள்ளோம் விஞ்ஞானத்தை ஏற்காதவர்கள் கூறுவர். 20 ஆம் நூற்றாண்டின் பிரபல வானியலாளரான கார்ல் சாகன் இதற்கு விடை சில மில்லியன்களாக இருக்கும் என்றுள்ளார். இந்த சமன்பாட்டை உருவாக்கிய டிரேக்கோ இதற்கான விடை சராசரியாக 10 000 ஆகவிருக்கலாம் என்றுள்ளார்.
இன்று நாம் ஏலியன்களைக் கண்டறிய மிகப் பெரிய சக்தி வாய்ந்த வானொலி தொலைக் காட்டிகளை (Radio Telescopes) பயன்படுத்துகின்றோம். SETI வானியலாளர்கள் சூரியனுக்கு இணையான ஆயிரக் கணக்கான சிவப்புக் குள்ளன் (Red Dwarfs) நட்சத்திரங்களையும், அவற்றை சுற்றி வரும் பூமிக்கு ஒப்பான கிரகங்களையும் இலக்காகக் கொண்டு தமது ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
ரேடியோ அலைகள்
இவர்கள் பெரும்பாலும் எதிர்ப்பார்ப்பது பூமியில் AM அல்லது FM இற்கு இணையான குறுகிய சமிக்ஞைகள் (narrow-band signals) ஆகும். அதாவது விண்வெளி கூறுகளான குவாசர்கள், பல்சார்கள் போன்றவை வெளிப்படுத்தும் இயற்கையான அதிகளவு மீடிறன் (Frequency) கொண்ட வானொலி அலைகளை அல்ல. இந்த குறுகிய சமிக்ஞைகளை மனிதனைப் போன்ற அறிவுத்திறன் மிக்க உயிரினங்களால் டிரான்ஸ்மிட்டர்கள் மூலமாக மாத்திரமே வெளியிடவோ, பெறவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்மீன்கள், கோள்கள் ஆகியவை எதிரொளிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் விண்மீன்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். வில்லைகள் (Lense) உடன் கூடிய நவீன தொலைக்காட்டிகளால் வானை அவதானிக்கும் போது மேகக் கூட்டங்களால் ஏற்படும் இடையூறு ரேடியோ தொலைக் காட்டியில் ஏற்படுவதில்லை.
1932 இல் உருவாக்கப் பட்ட முதல் வானொலித் தொலைக் காட்டிக்குப் பின்பு இன்றுவரை உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 100 இற்கும் அதிகமான அதிசக்தி வாய்ந்த பாரிய வானொலித் தொலைக் காட்டிகள் பூமியில் நிறுவப் பட்டுள்ளன.
இன்று பூமியில் உள்ள முக்கியமான மிகப் பெரிய வானொலித் தொலைக் காட்டிகளின் சுருக்கமான விபரமும் புகைப் படமும் :
1.Atacama Large Millimeter/submillimeter Array – ALMA (Chile) ...
2.FAST (China) ...
3.Effelsberg (Germany) ...
4.Medicina (Italy) ...
5.Sardinia Radio Telescope (Italy) ...
6.Lovell Radio telescope (England) ...
7.Parkes (Australia) ...
8.Square Kilometer Array – SKA.
இந்த வானொலித் தொலைக் காட்டிகள் தொடர்பான சுருக்கமான விபரத்தை ஆங்கிலத்தில் பெறப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள் :
https://www.radio2space.com/largest-radio-telescopes-in-the-world/
கெப்ளர் தொலைக் காட்டிக்குப் பின்பு எமது பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய பூமிக்கு ஒப்பான கிரகங்களை (Exoplanets) கண்டுபிடிக்கக் கூடிய அடுத்த தலைமுறை கிரக வேட்டைக் காரர்கள் அதாவது தொலைக் காட்டிகள் குறித்து இனிப் பார்ப்போம்..
ELT Telescope
இந்தப் புதிய வகைத் தொலைக் காட்டிகள் பூமியில் இருந்து 1000 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தாலும், குறித்த Exopolanet இன் அளவு, அதன் நட்சத்திரத்தில் இருந்து அது அமைந்துள்ள தூரம் மற்றும் அதில் உயிர் வாழ்க்கைக்குரிய அறிகுறி உள்ளதா என்பவற்றைக் கண்டு பிடிக்கும் திறன் வாய்ந்தவை. பூமியின் தரையில் உள்ள ஆப்டிக்கல் அதாவது ஒளியியல் தொலைக் காட்டிகளில் சுபாரு (SUBARU) மற்றும் எல்ட் (ELT) ஆகியவை முக்கியமானவை ஆகும்.
Subaru Telescope
இவற்றில் சுபாரு 8.2 மீட்டர் துளை (Aperture) கொண்ட வில்லையையும், ELT (Extremely Large Telescope) 39.3 மீட்டர் துளை கொண்ட வில்லையையும் உடையவை. சுபாரு 2014 ஆமாண்டே நிறுவப் பட்ட போதும், ELT ஆனது 2024 ஆமாண்டு முதல் தான் செயற்படவுள்ளது. பூமியின் தரையை மையமாகக் கொண்ட தொலைக் காட்டிகள் மிகவும் பாரமான, சக்தி வாய்ந்த வில்லைகளை (Optics) கொண்டிருக்க முடியும் என்பதுடன் அவற்றைப் பராமரிப்பதும் இலகுவாகும். ஆனால் பூமியின் காற்று மண்டலம் சூரிய ஒளியை வடிகட்டுவதும், சிதறடிப்பதும், மேகங்களின் செறிவும் இத்தொலைக் காட்டிகளின் செயற்படு திறனைப் பாதிக்க வல்லனவாகும்.
இத்தொலைக் காட்டிகளின் முக்கியத்துவம் குறித்தும், ஏனைய கோள் வேட்டைக் காரர்கள் (Planet hunters) அதாவது நவீன செய்மதிகள் தொலைக் காட்டிகள் குறித்தும் அடுத்த தொடரில் பார்ப்போம்..
தகவல் : விக்கிபீடியா, நேஷனல் ஜியோகிராபிக் சஞ்சிகை
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்