வானியல் ஆராய்ச்சிகளுக்கு மிகப் பெரும் பங்களிப்பை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கியவாறு விண்ணில் பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஹபிள் தொலைக் காட்டியின் செயற்பாட்டில் கடந்த சில நாட்களாக கோளாறு ஏற்பட்டிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
இதற்கு காரணம் ஹபிளுக்கு கட்டளைகளை வழங்கும் பேய்லோட் கணணி செயலாற்றுவதை நிறுத்தி விட்டது என்று கூறப்படுகின்றது.
ஆனாலும் தொலைக் காட்டியும், அதன் விஞ்ஞான உபகரணங்களும் திறம்பட செயலாற்றும் தன்மையில் தான் உள்ளன என்றும் நாசா தெரிவித்துள்ளது. Payload computer ஆனது ஹபிளுக்கு அதன் விஞ்ஞான உபகரணங்களை கண்காணித்தல், பராமரித்தல் போன்ற பணிகளையும் ஆற்றக் கூடியது. இதனை மீள இயக்கக் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப் பட்ட முயற்சி தோல்வியுற்றது. இது பழுதானதற்குக் காரணம் இதில் உள்ள கணணி தகவல் பதிவில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு என்றும் கூறப்படுகின்றது.
இந்தத் தகவல் பதிவை பேக் அப் செய்யும் பணியும் தோல்வியடைந்துள்ளது. இந்த Payload Computer இன் தொழிநுட்பமானது 1980 களுக்கு முற்பட்டது என்றும் இது 2009 ஆமாண்டு புதுப்பிக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது. 1990 களில் ஏவப்பட்ட ஹபிள் தொலைக் காட்டியானது இன்றைய வானவியலின் பார்வையை மாற்றியமைத்து புரட்சி செய்த ஒரு விஞ்ஞான உபகரணமாகும். இதன் எண்ணற்ற புகைப் படங்கள், சூரிய குடும்பம் மாத்திரமன்றி எமது பால்வெளி அண்டம் மற்றும் அதி தொலைவில் உள்ள அண்டங்கள் மற்றும் நெபுலாக்கள் குறித்தும் இருந்தன. இவை ஆய்வுக்குப் பெரிதும் பயன்பட்டன.
ஹபிளுக்கு மாற்றாக புதிய மிகவும் சக்தி வாயந்த ஜேம்ஸ் வெப் விண் தொலைக் காட்டி இந்த வருட இறுதியில் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.