நிலவில் முதன்முறை அமெரிக்க வீரர்கள் கால் பதித்து சுமார் 50 வருடம் கழிந்து விட்டன.
இதன் பின் உலகின் 3 ஆவது நாடாக சீனாவின் சாங்கி-5 ஆளில்லா விண்கலம் நிலவில் தரை இறங்கி சீனக் கொடியை நிலை நாட்டிய பின், தற்போது அங்கிருந்து பாறை மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளது.
கடந்த வியாழன் இரவு பீஜிங் நேரப்படி இரவு 11.10 இற்கு இந்த சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கிப் புறப்பட்டது. நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த செயற்திட்டத்தில் முதல் அங்கமாக டிசம்பர் 1 ஆம் திகதி சாங்கே-5 நிலவில் தரை இறங்கியது. டிசம்பர் 16 ஆம் திகதி இது பூமியை வந்து சேரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்கலம் நிலவில் இருந்து சுமார் 2 கிலோ எடை கொண்ட மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் உலகில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குப் பிறகு நிலவில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து வரும் 3 ஆவது நாடாக சீனா பெருமை பெறுகின்றது. இதேவேளை பூமியில் இருந்து சுமார் 30 கோடி தொலைவில் அமைந்துள்ள ரியுகு (Ryugu) என்ற விண்கல்லில் இருந்து சேகரிக்கப் பட்ட மாதிரிகளுடன் ஜப்பானின் ஹயபுசா 2 விண்கலம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது.
உலகின் முதல் நாடாக விண்கல் ஒன்றில் இருந்து மாதிரிகளைச் சேகரித்த பெருமையை இதன் மூலம் ஜப்பான் பெறுகின்றது. 2014 டிசம்பர் 3 ஆம் திகதி இந்த ஹயபுசா 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. 2018 ஆமாண்டு ஜூன் 27 ஆம் திகதி இந்த ரியுகு விண்கல்லை நெருங்கிய ஹயபுசா-2 அங்கிருந்து மாதிரிகளைப் பத்திரமாக சேகரித்த பின் பூமிக்குத் திரும்பியது.
ரியுகு விண்கல்லில் இருந்து ஹயபுசா 2 விண் ஓடத்தால் எடுத்து வரப்பட்ட மாதிரிகள் அடங்கிய பெட்டகம்..
இந்த மாதிரிகளுடன் ஹயபுசா 2 கேப்சியூல் சனிக்கிழமை மாலை தெற்கு அவுஸ்திரேலியாவின் வூமெரா என்ற இடத்துக்கு அருகே பாரசூட் உதவியுடன் பத்திரமாகத் தரை இறங்கியது. உடனே அப்பகுதிக்கு விரைந்த ஜப்பானின் ஜாக்ஸா விண்வெளி ஆய்வு மையத்தின் மிஷன் குழுவினர் குறித்த கேப்சியூலைக் கைப்பற்றினர். இதன் பின் அவர்கள் மகிழ்ச்சி படத் தெரிவித்த கருத்தில் விண்கல் மாதிரிகள் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
சூரிய குடும்பம், பூமி போன்றவற்றின் தோற்றம் மற்றும் பூமியில் உயிரினங்களின் தோற்றம் ஆகியவை எவ்வாறு இடம்பெற்றிருக்கலாம் என்பது போன்ற தகவல்களை ஹயபுசா 2 மாதிரிகளைச் சேகரித்த ரியுகு போன்ற விண்கற்களை ஆய்வு செய்வதன் மூலம் அறியலாம் என வானியலாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த விண்கற்கள் தோற்றம் பெற்று பல பில்லியன் வருடங்கள் ஆனாலும் மாற்றமடையாது இருக்கும் தன்மை கொண்டவை என்பது இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.