இது மிகவும் ஆபத்தான முயற்சி எனும் சில புவியியலாளர்கள்..
நிகழ்கால டிஜிட்டல் உலகில் மனித இனத்துக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் மிக அச்சுறுத்தலாக இருப்பது புவி வெப்பமயமாகி (Global Warming) வரும் அதீத காலநிலை மாற்ற நிகழ்வாகும். இதனால் உலகின் பல பாகங்களிலும் வழக்கத்துக்கு மாறான மோசமான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டவாறே உள்ளன.
இதன் ஒரு முக்கிய கவலைக்குரிய நிகழ்வு துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகிக் கடல் நீர் மட்டம் உயர்வடைதலாகும். இந்த விளைவு அதிகமானால் உலகின் சிறிய தீவுகள் கடல் நீரில் மூழ்கிக் காணாமல் போகவும், கடற்கரையோரம் இருக்கக் கூடிய நியூயோர்க், டோக்கியோ மற்றும் லண்டன் போன்ற உலகின் முக்கிய பொருளாதார வர்த்தக நகரங்கள் சுனாமி போன்ற பெரிய அலைகளை எதிர்கொள்ளவும் நேரிடலாம்.
பூகோள அடிப்படையில் கடந்த 150 ஆண்டுகளுக்குள் அனைத்து சமுத்திரங்களினதும் நீர் மட்டம் சராசரியாக 3 செண்டி மீட்டர் அதிகரித்துள்ளது. அண்மைக் காலமாக இந்த அதிகரிப்புக்கு கிறீன்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்காவில் அதிக பனிப்பாறைகள் உருகி வருவது காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
மனிதனின் சக்தி நுகர்வுக்காக வெளியேற்றப் படும் காரியமில வாயுக்களை விட பனிப்பாறைகள் அதிகம் உருகுவதே கடல் மட்டம் அதிகரிப்பதில் அதிக பங்கு வகிப்பதால் விஞ்ஞான ரீதியாக இதனைத் தடுக்கும் முயற்சிகள் குறித்து புவியியலாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பூமியின் கீழ் வளிமண்டலத்தில் மூடுபனியை செயற்கையாகத் தெளித்து விடுவதன் மூலம் சூரிய ஒளி அதிகளவில் பனிப்பாறைகளில் பட்டு அவை உருகும் வீதத்தைக் குறைப்பது இதில் சர்ச்சைக்குரிய ஒரு முயற்சியாகும். அண்மையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் குழு மும்மொழிந்த முயற்சியில், கிறீன்லாந்து மற்றும் அண்டார்ட்டிக்காவில் பிளந்து கரைந்து வரும் மிகப் பெரும் பனிப்பாறைகளான (The Glaciers) இன் நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து அவை ஒன்றோடு இன்னொன்று மோதுவதன் மூலம் துகள்களாகி கரையும் வீதத்தை குறைக்கும் விதத்தில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை Drilling போன்ற முயற்சிகளால் குறைத்து விடுவது என்ற தீர்மானம் மேற்கொள்ளப் பட்டது.
எனினும் இது போன்ற இன்னும் சில நுண்ணிய முயற்சிகளும் கூட மிக அதிகளவு சவால்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்டார்ட்டிக்காவில் கடந்த 30 வருடங்களில் மிக வேகமாகக் கரைந்து வரும் Thwaites என்ற பனிப்பாறை இதே வேகத்தில் தொடர்ந்தால் ஒரு சில தசாப்தங்களில் கடல் மட்டத்தை 65 செண்டி மீட்டராக உயர்த்தி விடும் என்றும் இது மிக மிக ஆபத்தானது என்றும் கணிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா உட்பட சுமார் 57 நாடுகள் இணைந்து சர்வதேச அண்டார்ட்டிக்கா உரிமைத் திட்டத்தை மேற்கொண்டிருந்தும் அடிப்படையில் ஒரு நாடு இதற்கு இணங்காது சுயமாக அண்டார்ட்டிக்காவில் புவியியல் பொறியியல் (Geo Engineering)சார்ந்த திட்டங்களில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் – The Economist