4தமிழ்மீடியாவின் 'அணுக்கரு' பற்றிய புதிய அறிவியல் தொடரின் முதல் 2 பாகங்களிலும் பண்டைய அறிஞர்களின் அணுக்கரு பற்றிய பார்வை மற்றும் நவீன அறிவியலில் அணுக்கரு பற்றிய அறிவு செலுத்தும் தாக்கம் தொடர்பில் பார்த்தோம்.
முதலிரு தொடர்களுக்குமான இணைப்பு கீழே :
'அணுக்கரு' - நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் - 4தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர்
அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம்! : பாகம் 2
அணுகுண்டுகள் வெடிக்கும் போது வெளிப்படும் மிக வலிமையான ஆற்றல், அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்றவை மட்டுமன்றி இயற்கையான அணுக்கதிர் வீச்சினை வெளியிடும் தனிமங்கள் என அனைத்து விதங்களிலும் கதிர்வீச்சு (Radioactivity) எவ்வாறு வெளிப்படுத்தப் படுகின்றது என்பதை ஆராய்வதும் இக்கட்டுரையின் நோக்கமாகும். கதிர்வீச்சு உட்பட அணுக் கதிர் ஆற்றலானது எமது வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப் படுகின்றது.
மருத்துவத் துறையில் இருந்து புவியியல் வரை, ஜெட் எஞ்சின்களைப் பரிசோதிப்பதில் இருந்து புகைப்பதைக் கண்டுபிடிக்கும் கருவி வரை என அனைத்திலும் இது பயன்படுகின்றது. உதாரணத்துக்கு கனடாவில் உள்ள ஒரு அணு உலையில் பணி புரியாமல் ஒரு தடவை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த போது, கதிர்வீச்சு ஐசோடோப்புக்கள் கிடைக்காத காரணத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 47 000 மருத்துவ சிகிச்சைகள் பாதிக்கப் பட்டதாகக் கணிக்கப் பட்டது. இதிலிருந்து மருத்துவத் துறையில் அணுக்கரு அறிவியலது தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இது தவிர எமது பூமி உட்பட சூரிய குடும்பத்தின் வயதை எவ்வாறு நாம் இவ்வளவு துல்லியமாகக் கணித்துள்ளோம்? இக்கேள்விக்கான பதிலை ஆராயும் போது கதிர்வீச்சு எமக்கு உதவும் இன்னொரு தனித்துவமான துறையாக தொல்பொருளியல் விளங்குவதை அறியலாம். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பூமியிலுள்ள சில வகைப் பாறைகளில் இயற்கையாகவே அணுக்கதிர்வீச்சு செயற்பாடு இருப்பதை ஏர்னெஸ்ட் ரதெர்போர்டு கண்டறிந்திருந்தார். இக்கண்டுபிடிப்பு இன்று எமக்கு எமது சூரிய குடும்பம் பூமி உட்பட அண்டங்களில் உள்ள கிரகங்களது வயதை அல்லது புவியியல் வரலாற்றை அறிய மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
எம்மால் அறியப் பட்ட தனித்துவமான நூறு மூலகங்கள் என அனைத்துக்கும் அடிப்படையான ஒரு தனித்த கூறு (Substance) உள்ளதா என பண்டைய கிரேக்க விஞ்ஞானியான தேல்ஸ் இற்கு ஏற்பட்ட அடிப்படை அறிவியல் தாகம் நவீன யுகத்தில் பல பரிமாணங்களைக் கடந்துள்ளது. ஆம். இன்று நாம் அணுக்கருவை (Atomic Nuclei) விட மிக மிகச் சிறிய கட்டமைப்புக்களைக் கொண்டுள்ள பல அடிப்படைத் துணிக்கைகளை (Elementary Particles) மிகத் துல்லியமான ஆய்வுகள் மூலம் அறிந்துள்ளோம்.
மேலே படத்தில் காணப்படுவது : குவார்க் குளுவோன் பாய்மம் (Quark-gluon plasma) - பிரபஞ்சத் தோற்றத்துக்குக் காரணமான பெருவெடிப்பு நிகழ்ந்து மில்லியனில் 1 பங்கு செக்கனுக்குப் பின் உருவான பொருள் - (படம் - CERN ஆய்வகத்தின் கணணி வடிவமைப்பு)
அணுக்கரு தொடர்பான விரிவான ஆய்வு விளக்கங்களுக்குச் செல்லும் முன் நம் கண்ணால் காணக் கூடிய பொருட்களுக்கான அளவீட்டு ஒப்பீடுகள் பற்றி பார்ப்போம். பண்டைக் கால மனிதனுக்கு மிகச் சிறிய பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க தூசு துகள்கள், மணல் போன்றவையும், மிகப் பெரிய பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மலைகள், மரங்கள் அதிகபட்சமாக பூமியும் தான் தெரிந்திருந்தது. ஆனால் நுணுக்குக் காட்டி (Microscope) மற்றும் தொலைக் காட்டி (Telescope) ஆகியவற்றின் கண்டு பிடிப்பு முக்கியமாக இவையிரண்டுக்கும் ஆதாரமான வளைந்த, குவிந்த கண்ணாடி அல்லது வில்லைகள் (Lense) ஆகியவற்றின் பயன்பாடு மனித அறிவு விருத்திக்கு அதிக சந்தர்ப்பங்களை அளித்தது.
எமது பிரபஞ்சம் குறித்த புரிதல் எம்மால் நினைத்துப் பார்க்க இயலாத மிகப் பெரிய கூறுகளையும், அதே போன்ற மிகச் சிறிய கூறுகளையும் என இரண்டு துருவங்களையும் உள்ளடக்கியது தான். இதில் மிகச் சிறிய கூறுகளின் ஓர் அடிப்படைக் கூறு தான் அணுக்கரு (Nucleus) நாம் ஏற்கனவே கடந்த அறிவியல் தொடர்களில் பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கூறுகளான, சூரிய குடும்பம், நமது பால்வெளி அண்டம், அருகே உள்ள அண்ட்ரோமிடா அண்டம், எமது பார்வை எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் மற்றும் ஒளியின் வேகம் என்றால் என்ன என்பவை குறித்துப் போதுமான அளவு பார்த்து விட்டோம்.
எனவே இத்தொடரில் சாதாரண நுணுக்குக் காட்டி (Microscope), மின்நுணுக்குக் காட்டி (Electron Microscope) மற்றும் நவீன அதி சக்தி துகள் மோதுகைக் கருவிகள் (particle colliders) போன்றவற்றால் அவதானிக்கக் கூடிய அணுக்கரு, துணை அணுத்துணிக்கைகள் போன்றவற்றின் சின்னஞ்சிறு உலகம் எவ்வாறு கட்டமைக்கப் பட்டுள்ளது என்பது குறித்து முதலில் பார்ப்போம்.
இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் எதிர்பாருங்கள்...
நன்றி, தகவல் : Nucleus 'a trip into the heart of matter'
- 4தமிழ்மீடியாவுக்காக நவன்