ஜோதிடத்தை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியததென்பது பொதுவாக வைக்கப்படும் ஒரு வாதம். நுடபமாகக் கவனித்தால் அது ஓரு வானியல் அறிவு.
இந்து வேத ஜோதிட அறிவியல் ஆய்வுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரிஷிகளின் ஆழ்ந்த ஞானஅறிவியலில் தோன்றியவை. அவற்றின் மூலம் சூரியன் முதலான கிரஹங்களின் நகர்வு மற்றும் அசைவுகள் கணிப்பிடப்பட்டன.

மேற்குலகில், அக் காலத்துக்குப் பின்னராக தோன்றிய பெருமதங்களும், அவைசார்ந்த அரசுகளும், கிரஹங்கள் யாவும் பூமியைச் சுற்றி வருவதாகவே நம்பிக்கை கொண்டிருந்தன. அதில் பெரும் மாறுதலான கருத்தினை முன்வைத்து, சூரியனைச் சுற்றியே பூமி முதலான ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன எனும் கருத்தினை முன்வைத்தவர், 1564 பெப்ரவரி 15 முதல், 1642 ஜனவரி 8 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த இத்தாலிய வானியல் அறிஞரான கலிலீயோ கலிலி. அவரது கருத்தினை அப்போதைய மதவியல் மற்றும் அரசியல் சார்ந்தோர் எதிர்த்திருந்தனர். சூரியன் மையத்தில் உள்ளது. பூமி தன் அச்சில் சுழல்கிறது.பூமி சூரியனைச் சுற்றுகிறது.எனும் அவரது கணிப்பியல்களும், கருத்தியல்களும், கடுமையாக எதிர்க்கப்பட்டன.

அதிகார பீடங்கள் ஒருபோதும் ஆக்கபூர்வமான கருத்துக்களை இயல்பாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதே உலக வழக்கு. கலிலீயோவின் கருத்துக்களும் அதேவழியில் மறைக்கப்பட்டாலும், அவரது மறைவின் பின்னதாக படிப்படியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ஏற்றுக் கொள்ளலின் அடிப்படையில் சூரிய நகர்வினை மையப்படுத்தி, உருவானதே மேற்குலகின் ஜோதிட கணிதமுறை. அதனடிப்படையிலேயே மேற்குலக ஜோதிடத்தில், இராசிகளும் பலன்களும் கூறப்படுகின்றன.ஆனால் அதனிலும் துல்லியமானது சந்திர நகர்வுகளின் படி கணிக்கபெறும் ஜோதிட அறிவியல் என்பதே, மேற்குலகின் வானியல் கருத்துக் காலத்துக்கு முன்னதாகவே, இந்து தர்மம் உலகுக்கு வகுத்துத் தந்த ஜோதிடசாஸ்திரம்.

கலிலீயோ வாழ்ந்த காலத்தில், அவரது கருத்தியலை மறுத்த சமூகம்,1642 ஜனவரி 8 இல் தனது 77வது வயதில் காலமானபோது, அவரது உடலை அவரது சொந்த ஊரான புளொரென்ஸ் சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் நல்லடக்கம் செய்து வைக்க, அப்போதை தொஸ்கான் பிராந்திய அரசும் உயர் மத பீடமும் மறுத்தது. அவர் மறைந்த சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னாக, அவரது கருத்துக்கள் சரியென ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், 1737 இல் அவரது உடல் கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு, புளொரென்ஸ் சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் மீளடக்கம் செய்யப்பட்டது.

கலிலீயோ மற்றும், செவிலியர் பணியின் தாய், விளக்கேந்திய மாது, எனப்போற்றப்படும் புளொரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையார், ஆகியோரது உறைவிடங்களைக் காண, புளொரென்ஸ் சாந்தா குரோஸ் பாசிலிக்காவில், சென்றபோது, றேடியோ அலைவரிசை அறிஞர் மார்க்கோணி, ஓவியரும் சிற்பியுமான மைக்கேல் ஆஞ்சலோ, புகழ்பெற்ற 'மோனலிசா' படம் வரைந்த பல்துறைக்கலைஞரான லியானார்டோ டாவின்ஸி என பல அறிஞர் பெருமக்களின் துயில்பீடங்களையும் காணமுடிந்தது.

இவை மட்டுமன்றி, புளொரென்ஸ் நகரம் முழுவதுமே ஒரு கலைப் பெருநகரம்தான். அவை பற்றி மறுமொரு பதிவில் விரிவாகக் காணலாம்....
- மலைநாடான்
