தஞ்சாவூர் அருகில் உள்ள சூரக்கோட்டை கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருக்கிறார் ரஜினி.
நல்லவர்களை வாழ வைத்து, கெட்டவர்களைப் புரட்டியெடுக்கும் கிராமத்துக் ‘காளையன்’ ஆக வலம் வரும் ரஜினியின் உலகம் என்பது அவருடைய தங்கையான தங்க மீனாட்சியான கீர்த்தி சுரேஷ். அவரைப் பிரசவித்துவிட்டு அம்மா இறந்துபோக, தொப்புள்கொடி உலரும் முன்பே தங்கையைச் சுமந்து வளர்ந்து வளர்க்கத் தொடங்குகிறார் ரஜினி. திருமணம் என்ற பெயரால் தங்கையை பிரிந்திருக்க முடியாது என்பதால், வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றலளவில் மாப்பிள்ளை பார்க்கிறார். ஆனால், கொல்கத்தாவுக்குப் படிக்கப்போன இடத்தில் ஒரு வங்காளி இளைஞரைக் காதலித்துவிடும் கீர்த்தி, அண்ணனிடம் சொல்ல முயற்சித்தும் அவரை அது சென்று சேராத நிலையில் திருமணத்தன்று இரவே வீட்டை விட்டு வெளியேறுகிறார். நொறுங்கிப்போகும் ரஜினி தங்கையைத் தேடி கொல்கத்தா வருகிறார். வந்த இடத்தில் தங்கையைப் பாராரியாக் கண்டு நிலைகுலையும் ரஜினி, அவரது இந்த நிலைக்கு யார் காரணம் எனத் தெரிந்துகொள்ள தன்னுடைய வழக்கறிஞர் நயன் தாரா உதவியுடன் வீச்சரிவாளுடன் களமிறங்குகிறார். தங்கையின் கண்ணீருக்குக் காரணமான வில்லன்களை, கிராமத்து காவல் தெய்வமான ரஜினி எப்படி சூரசம்ஹாரம் செய்தார் என்பது கதை.
கடைசியாக ரஜினி நடித்த தர்பார் பாடத்தில் அவரிடம் முதுமையின் போதாமைகள் அதிகமாக வெளிப்பட்டன. ஆனால் அண்ணாத்தயில் இயக்குநர் சிவா என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை. அறிமுகக் காட்சி தொடங்கி, கொல்கத்தாவின் ஹூக்ளி நதிக்கரையில் தூர்க்கா பூஜா திருவிழாவுக்கு நடுவில் தன்னைக் காப்பாற்றியது யார் என்று அடிப்பட்டு வீழ்பவர்களிடன் கேஞ்சும் தங்கைக்கு தரிசனமாகி அவரது கண்ணீரைத் துடைக்கிற கடைசி காட்சிவரை ரஜினியிடம் அவ்வளவு புத்துணர்ச்சி. சுறுசுறுப்பான உடல்மொழி. ரஜினிக்கான பன்ச் டயலாக்குகளிலும் இயக்குநரின் கைவண்ணம் நன்று.
பொதுவாக இயக்குநர் சிவாவின் படங்களில் லாஜிக் எதிர்பார்த்துச் செல்லக் கூடாது. அதற்கு அண்ணத்த படமும் விதிவிலக்கு அல்ல. கிராமத்தில் ரஜினியை எதிர்க்கும் பிரகாஷ் ராஜ்தான் பிரதாசன வில்லனோ என்று எதிர்பார்த்தால், கொல்கத்தாவில் அபிமன்யூ சிங், ஜெகபதிபாபு என்று மிரட்டலான வில்லன்கள். மூன்று பெரிய வில்லன்கள் இருந்தால்தான் ரஜினி எனும் ‘மேன் ஆஃப் மாஸ்’ தாங்குவார் என்று நினைத்த வகையில் இயக்குநரின் ஸ்கெட்ச் பக்கா. பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன வில்லன் நடிகர் ஜெகபதிபாபுவை மிரட்டாலாகக் காட்டிய வகையில் சிவாவின் கிராஃப்ட் ஒர்க்கைப் பாராட்டலாம்.
அண்ணன் - தங்கை பாசத்தில் இருக்கும் நாடகத்தை முடிந்தவரை ‘ஓவர் டிரமடிக்’ ஆகாமல் பார்த்துகொண்டிருக்கிறார். அதேபோன்று ரஜினிக்கான ‘லவ் இண்ட்ரஸ்ட்’ என்று நயன் தாராவை சுருக்கிவிடாமல், ரஜினியின் சூரசம்ஹார வேட்டையில் பங்கெடுக்கும் சைலண்ட் சட்டப்புலியாக வலையவருகிறார் நயன் தாரா.
ரஜினியுடன் பல படங்களில் ஜோடிபோட்ட மீனா -குஷ்பூ இருவரும் ரஜினியின் அத்தை மற்றும் மாமன் மகள்களாக வந்து சில காட்சிகளில் நகைச்சுவை ரணகளம் செய்தாலும் கட்டிய கணவன்களை ‘காலி’ செய்துவிட்டு மாமன் ரஜினியை மணக்க விரும்புவதாகக் கூறுவது சத்தியமாகத் தமிழ்ப் பண்பாடு கிடையாது மிஸ்டர் சிவா.
கீர்த்தி சுரேஷ் தங்கையின் வேடத்தை அழகாக உள்வாங்கி ரஜினியின் நடிப்புக்கு டஃப் கொடுத்துள்ளார். சூரி, வேல ராமமூர்த்தி போன்றவர்களுக்கு படத்தில் அவ்வளவாக இடமில்லை என்றாலும் ரஜினியின் பக்கத்தில் நின்று சரியாக கைகொடுத்திருக்கிறார்கள்.
ஒன் மேன் ஆர்மியாக ரஜினி படத்தை மொத்தமாக தாங்கி நிற்பதுபோல், திரைக்கதையின் மொத்த நாடகத் தன்மையையும் அட்டகாசமாக ஏந்திக்கொண்டிருக்கிறது இமானின் பாடல்களும் பின்னணி இசையும்.
ஆயிரம் குறைகள் இருந்தாலும் அண்ணன் - தங்கை பாசத்தை தாங்கிப்பிடிக்கும் இந்த கிராமத்து ஐய்யனார் சாமி அதிரடி ஆட்டம் சத்தியமான இது ‘அண்ணாத்த தீபாவளி’ என்று சொல்ல வைத்திருக்கிறது.
- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு