மலையாளத்தில் எந்த படம் எடுத்தாலும் கொண்டாட வேண்டும் என்கிற முனைப்பு தமிழர்கள் மத்தியில் உண்டு. அந்த உள்ளூர் உலக சினிமா ரசனையின் அடிப்படையில் இந்தப் படத்தை நாம் அணுகத் தேவையில்லை.
ரொம்ப காலமாகவே உள்ளூர் க்ரிஷ் முதல் ஹாலிவுட் அவெஞ்சர்ஸ் வரை பல சூப்பர்ஹீரோ படங்களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மின்னல் முரளி ஒரு அசலான உள்ளூர் முயற்சி.
இந்தியாவில் சூப்பர்ஹீரோ படங்கள் எடுத்தாலே பெரும்பாலும் அது ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட மூன்றாம் தர சூப்பர்ஹீரோ படங்கள் போலதான் இருக்கும். காரணம் நம்மவர்கள் அப்படியே ஹாலிவுட்டை காப்பி செய்து பிரம்மாண்டம் காட்ட முயல்வார்கள். அந்த பிரம்மாண்டத்திற்கு ஏற்ப இவர்களிடம் பட்ஜெட்டும் இருக்காது. மிதமிஞ்சி பட்ஜெட் இருந்தாலும் அதில் கதையே இருக்காது. உதாரணத்திற்கு க்ரிஷ் முதல் பாகத்தோடு அதனுடைய அடுத்தடுத்த பாகங்களையே ஒப்பிட்டுக் கொள்ளலாம். அடுத்தடுத்து பாகங்களின் கதைகள் அவ்வளவு கேவலமாக இருக்கும்.
மின்னல் முரளியிலும் தேவையான இடங்களில் பிரம்மாண்டங்கள் இருந்தாலும் அவர்களுக்கு உரிய ட்ராமாவை அதில் அழகாக செட் செய்திருக்கிறார்கள். ஜெய்சனோ, ஷிபுவோ இருவருக்கும் ஒரே சக்திதான் கிடைக்கிறது. இருவருக்கும் குழந்தை பருவத்திலிருந்தே ஒரே மாதிரியான இழப்பை சந்திக்கிறார்கள். ஆனால் இருவரின் வாழ்க்கையும் வேறு வேறு விதமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இருவருக்கும் ஏற்படும் காதல் தோல்வியை எடுத்துக் கொண்டால் கூட, முன்னாள் காதலியின் திருமணத்திற்கு சென்று பிரியாணி சாப்பிட்டுவிட்டு வரும் அளவிற்கு ஜெய்சனுக்கு அதை ரொமாண்டிசைஸ் செய்து கொள்வதிலிருந்து வெளியேறும் பக்குவம் இருக்கிறது. ஆனால் ஷிபு ஒரு செடியில் ஒரு பூதான் பூக்கும் ரக ரொமாண்டிசைஸான காதலை மிக தீவிரமாக எடுத்துக் கொள்ளும் அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்னும் நபராக இருக்கிறான்.
ஆனால் இருவரின் வாழ்க்கையிலும் அந்த கிராமமும், கிராம மக்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களாக இருக்கிறார்கள். இந்த கிராம மக்கள் மோசமானவர்கள் என்ற எண்ணம் இருவருக்குமே வருகிறது. ஷிபு மற்றும் அவன் விரும்பியவர்களை அவன் இழந்ததற்கு அந்த கிராம மக்கள் ஒரு வகையில் கண்டிப்பாக காரணம்தான். தனது வாழ்க்கையை தனது விருப்பப்படி யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ ஒருவனுக்கு உரிமை உண்டு. ஆனால் அந்த கிராமம் அதை ஷிபுவுக்கு தரவில்லை. ஆனால் கடைசி வரை அந்த கிராம மக்கள் அதை உணர்ந்ததாக எந்த வகையிலும் காட்டாமல் படத்தை முடித்தது சரியானதாக தோன்றவில்லை. படம் முழுவதும் கடந்த கால சம்பவங்களோடு நிகழ்கால செயல்களையும் தொடர்புபடுத்தி கோர்வையாக விறுவிறுப்பாக கொண்டு சென்றிருந்தாலும் படத்தின் முடிவு இந்திய மரபுக்கே உரிய தீயவை அழிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முடிந்தது மிகவும் சராசரியாக இருந்தது. அதிலும் வார்த்தைக்கு வார்த்தை இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும், மக்களை காப்பாற்ற வேண்டும் என மின்னல் முரளி சொல்வதெல்லாம் வலிய திணிக்கப்பட்டது போல இருக்கிறது.
நேர்மறை, எதிர்மறையாக விமர்சிக்க நிறைய இருந்தாலும் முன்னதாக சொன்னபடி பெரிய பட்ஜெட்டில் இந்திய படமாகவும் இல்லாமல், ஹாலிவுட் படமாகவும் இல்லாமல் எடுக்கப்படும் இந்திய சூப்பர்ஹீரோ படங்களுக்கு மத்தியில் பக்காவாக ஒரு இந்தியன் சூப்பர் ஹீரோ படத்தை எடுத்துள்ளதற்காக மின்னல் முரளியை கண் சிமிட்டாமல் காணலாம்.
- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு