வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக்குவதாக பிரகடம் செய்துவிட்டால், திரைப்படத்தின் நீளம் கருதி, அதில் உண்மைச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர, உண்மையாக நடந்த சம்பவங்களையே திரிக்கக் கூடாது.
இயக்குநர் ஏ.எல். விஜய், தமிழ்நாட்டின் முன்னாள் சினிமா நட்சத்திரம், முன்னாள் முதல்வர், மறைந்த ஜே. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு எனக் கூறி உருவாக்கியுள்ள ‘தலைவி’ படத்தின் பெரிய சிக்கலே இதுதான். இதனால் டைட்டில் போடும்போதே இது கற்பனைக் கதை என்று போட்டுவிட்டு, இஷ்டத்துக்கு கற்பனைகளையும் பொய்யையும் அடுக்கியிருக்கிறார்.
குறிப்பாக படத்தில் ஜெயலலிதாவின் ‘ஜெயா’. எம்.ஜி.ஆரின் ‘எம்.ஜே.ஆர்’. கருணாநிதியின் பெயர் ‘கருணா’. ஆர்.எம்.வீரப்பனை ‘ஆர்.என்.வீ . திமுக வை ‘தமக’. அதிமுகவை ‘மதமக’ என்றும் பெயர்களை மாற்றி மொள்ளமாறித்தனம் செய்திருக்கிறார் திரைப்படக் கலைக்கான ‘அறம்’ குறித்து அறியாத விஜய். இப்படி எழுத்துகளை மாற்றி விடுவதாலேயே இது கற்பனைக் கதை என்று ஆகிவிடாது என்பது இயக்குநருக்கு நன்றாகவே தெரியும். இப்படி கோல்மால் செய்யாவிட்டால் எப்படி பல கோடிகளை சம்பளமாகக் கொட்டிக் கொடுப்பார்கள்?
1996-ல் சட்டசபையில் ஜெயா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பிக்கும் படம், அப்போது மகாபாரதப் பாஞ்சாலியைப் போல அவர் எடுக்கும் சூளுரை எப்படி அவரை அதே சட்டசபையில் முதல்வராக அமரவைக்கிறது என்பதுடன் நிறைவு பெறுகிறது. இதில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இடையிலான காதல் மற்றும் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை முதன்மைப்படுத்தியிருந்தாலும் அரசியலை அந்தக் காதலைச் சிதைக்கும் வில்லன்களில் ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதை சாதாரண காதல் கதைபோல் காட்ட முயற்சித்தாலும் வில்லனாக ஆர்..எம்.வியை சுவாரஷ்யமாகச் சித்தரித்திருப்பது எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா அரசியல் வரலாறு தெரியாத இன்றைய இளம் பார்வையாளர்களுக்கு பிடித்த ஹீரோ - ஹீரோயின் - வில்லன் கதையாக பிடித்துப்போகும்விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய்.
படத்தின் முதல் பாதியில் திரைப்படத்தில் ஜெயா அறிமுகமாகி, (அறிமுகப்படுத்திய ஸ்ரீதரைப் பற்றி ஒரு காட்சி கூட இல்லை) அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஏற்படும் தொடர்பு அதன் மூலம் கிடைக்கும் புகழ், பின்பு எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வர, அவர்களிடம் ஏற்படும் பிரிவு என்று மிக மெதுவாகச் செல்ல, இரண்டாம் பாதியில் ஜெயாவின் அரசியல் வரவைக் காட்டி அவர் ‘அம்மா’வாக ஆவதுடன் படம் முடிகிறது.
தலைவி ஜெயாவாக கங்கனா ரணாவத். இந்த செய்தி வந்த நாளில் இருந்தே கங்கனாவின் உடல் மொழி எப்படி ஜெயலலிதாவுடன் ஒத்துப்போகும் என்று புரியாத புதிராகவே இருந்தது. ஆனால், அதை மேக்கப் முதலான அம்சங்களில் இட்டு நிரப்பி மேக்கப் செய்திருக்கிறார்கள். எப்படி இருந்தாலும் மிகச்சில வருடங்களுக்கு முன் மறைந்த மூக்கும் முழியுமான ஜெயலலிதா நம் மனத்தில் நிறைந்திருக்க, அவராக கங்கனாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் கங்கனாவின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது. “மிஸ்டர் எம்.ஜி.ஆராக இருந்தால் என்ன, யாராக இருந்தால்தான் என்ன? என் மனதில் மரியாதை வந்தால்தான் மதிப்பேன்” என்று அதிரடியாகச் சொல்லி பயமறியாத இளமைக் குறும்பை வெளிப்படுத்துவதில் தொடங்கி, எம்.ஜி.ஆரைப் புரிந்து கொண்டு அவர் மீது அன்பைப் பொழிவது, தன்னை எம்.ஜி.ஆரின் அரவணைப்பிலிருந்து பிரிக்க நினைத்த ஆர்.எம்.வீயின் வியூகங்களை தன் மதியூகத்தால் தவிடுபொடியாக்கும் சாதுர்யம் வரை வரும் காட்சிகள் அனைத்திலும் வெளுத்துக்கட்டியிருக்கிறார் கங்கனா. ‘தலைவரே’ தன்னைடமிருந்து விலகிப்போன நேரத்தில் அவரது எதிர்ப்பாசறைக்குச் சென்று தன்னை வளப்படுத்திக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை ஜெயலலிதா செய்ததாக படத்தில் காட்டுகிறார்கள். ஆனால், சிவாஜி பாசறையில் அவரை ஐக்கியமாக்கியதில் இயக்குநர் ஸ்ரீதருக்கும் நடிகர் சோவுக்கும் பெரும் பங்குண்டு என்கிற உண்மையையெல்லாம் மறைத்துவிட்டார்கள்
எம்.ஜே.ஆர். எனும் எம்ஜிஆராக வருகிறா அரவிந்த்சாமி. அவரது புகைப்படங்கள் வெளியான சமயம் அவர் அந்தப் பாத்திரத்தில் பொருந்தவில்லை என்று அவரை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்தார்கள். ஆனால், படத்தில் அவர் பல காட்சிகளில் எம்.ஜி.ஆராகவே உணர வைத்திருக்கிறார். நிறத்திலும், குணத்திலும் அவர் ஓகே. ஆனால். எம்.ஜி.ஆரிடம் முதுமையிலும் இருந்த துடிப்பு இவரிடம் மிஸ்ஸிங். இவர் சிரிக்கும்போது எம்.ஜி.ஆர். இவரிடம் இல்லாமல்போகிறார். அதேபோல் ஆர்.எம்.வீரப்பனின் பிரதியாக சித்திரிக்கப்படும் சமுத்திரக்கனி நிறைவாகச் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப் போற்றிப் பாதுகாக்க எந்த எல்லை வரையும் செல்லும் அவர் படத்தில் பெரும்பகுதியும் ஜெயாவின் வில்லனாக வருவதும், தலைவர் மறைவுக்குப் பின் ஜெயாவை தலைவியாக ஏற்றுக் கொள்வதும் நடந்த உண்மைக்கு சற்று நெருக்கமாக இருக்கிறது.
அரசியலில் ஜெயலலிதாவின் உண்மையான போராட்டம் திமுக தலைவர் மு.கருணாநிதியுடன் என்று இருக்க, இதில் ஆர்எம்வீயை சமாளிப்பதே ஜெயாவின் ‘டாஸ்க்’ ஆக இருக்கிறது. அதனால் கருணாவாக வரும் நாசர் அவ்வளவாக எடுபடவில்லை. அதிலும் இது தலைவியின் கதை என்பதால் இதில் கருணாநிதியின் பாத்திரம் முழுக்கவே எதிர்மறையாகச் சித்திரிக்கப் பட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டில் இன்று கல்வி தனியார் மயமானது தொடங்கி, உலக வங்கியில் கடன்வாங்கிக் குவிக்கத் தொடங்கியது வரை எம்.ஜி.ஆரின் நிர்வாகத்திறனற்ற ஆட்சியே பெரும் சிக்கல்களின் ஊழல்களின் தொடக்கம் என்பது வரலாறாக இருக்கும்போது, அவரை அப்பழுக்கற்ற மனிதராகக் காட்டியிருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் திரையில் கொண்டாட்டமாக விரிந்த பாடல்களின் 2 வரிகளை படமாக்கிக் காட்டியிருக்கிறார்கள். அவற்றுக்கு திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ். அதுவே ஒரிஜினல் ஸ்கோராக ஜி.வி.பிரகாஷ் இசைத்த பாடல்கள் வரும்போது படம் தொய்வடைகிறது. உண்மையான பாடல்களையே ரீமிக்ஸ் செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
காலக்கட்டத்தைக் கொண்டுவரும் கலை இயக்கம், அதை கேமராவில் கொண்டுவந்திருக்கும் ஒளிப்பதிவு இரண்டும் அற்புதம். கார்க்கியின் உரையாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அந்த மெதுவடை வசனம் திரையரங்கில் சிரிப்பலையை உருவாக்கத் தவறவில்லை. மற்றபடி, வி.என்.ஜானகியாக வரும் மதுபாலா அவ்வளவாக ஈர்க்கவில்லை, ஆனால், ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவாக வரும் ஹிந்தி நடிகை பாக்யா ஸ்ரீ, அவரது டிரைவர் கம் மேனேஜர் மாதவனாக தம்பி ராமைய்யா, எம்.ஆர்.ராதாவாக ராதாரவி, வைகோவாக வரும் ஜெயக்குமார், வலம்புரிஜான் வேடத்தில் வரும் சண்முகராஜன் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், ராதாரவி தன் அப்பாவை நினவுபடுத்துவதில் தனித்து ரசிக்க வைக்கிறார்.
கொஞ்சம் உண்மை நிறைய பொய் என கலந்து கட்டியிருக்கும் தலைவி எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் புறம்மான காதலை சித்தரிப்பதில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.
4தமிழ்மீடியா விமர்சனக் குழு