free website hit counter

நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இம்முறை Vision du Reel சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் Petra Costa எனை மிக கவர்ந்திருந்தார். பிரேசிலின் உருவெடுக்கும் புதிய அலை சினிமாவில் பெரிதும் புகழ்பெற்ற இளம் பெண் இயக்குனர் இவர்.

36 வயதே ஆகிறது. ஆனால் இவருடைய ஆவண, புனைவுத் திரைப்படங்கள் பிரேசிலில் காமர்ஷியல் ரீதியிலும், கருத்து விமர்சனங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக இவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, இம்முறை ஆஸ்காருக்கு சிறந்த ஆவணத் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது. அதோடு Netflix உட்பட பல VOD இணையத் தளங்கள் போட்டி போட்டு அவருடைய திரைப்படங்களை வாங்கத் தொடங்கியுள்ளன.

« மனிதர்கள் எப்படி அசைகின்றனர் என்பதனை விட, அவர்களை எது அசைக்கிறது என்பதனை தேடுபவள் நான் » என்கிறார் Petra Costa. இவரை உலகம் திரும்பிப் பார்க்க வைத்த முதல் திரைப்படம் « Elena ». இளம் வயதில் நடிகையாகும் கனவுடன் பிரேசிலிருந்து நியூயோர்க் சென்ற அவருடைய சொந்த சகோதரியை தேடிச் செல்லும் ஆவணத் திரைப்படக் கதை இது. Petra வுக்கு ஏழு வயதாக இருக்கும் போது அவருடைய சகோதரி விட்டுச் சென்றார். 20 வருடத்திற்கு அவரை தேடி நியோர்க்கு செல்லும் Petro Costa வை தொடர்கிறது கமெரா. 2012 இல் பிரேசில் மக்களை தனது தனித்துவமான ஆவணத் திரைப்பட ஸ்டைலால் புரட்டிப் போட்ட திரைப்படம் இது.

யார் ஒட்டுண்ணி ? - பாரசைட் விமர்சனம்

அவருடைய கடைசிப் படமான The Edge of Democracy, 2019 இல் வெளிவந்தது. இன்றைய பிரேசிலை ஆட்சி செய்யும் தீவிர வலது சாரிக் கட்சியாளரான Bolsonaro ற்கு முன்பு, ஆட்சியில் இருந்தவர்களில் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த லூலாவையும், அவரைத் தொடர்ந்து, பிரேசிலின் முதல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட Dilma Rousseff ஐயும் தொடரரும் ஆவணத் திரைப்படம் அது. அவர்களுடைய வளர்ச்சியும், வீழ்வுமே படத்தில் காண்பிக்கப்படுகிறது. Dilma Rousseff குறிப்பாக எப்படி ஊழல் மோசடி வழக்கில் சிக்குண்டார், அதன் பின்னணி என்ன, அது தொடர்பில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணை என பலவற்றை அலசுகிறது. அதோடு அவர் மீது Petra வுக்கு இருந்த தனிப்பட்ட தொடர்பு, மரியாதை, கவலை என்பவற்றையும் அலசுகிறது. Petra இன் குடும்பமும், காலம் காலமாக அரசியல் அழுத்தங்களில் பெரிதும் சின்னாபின்னமாகி இருந்ததால், இத்திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கும், அவருடைய தனிப்பட்ட குடும்பத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கும். சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் பெற்ற இத்திரைப்படத்தை உடனடியாக Netflix தளம் வாங்கிக் கொண்டது.

வீரம்மாவும், Protée வும் !

இவருடைய Masterclass இணையவெளியில் நடைபெற்ற போது, அதை முழுவதுமாக பார்க்க கிடைத்தது. அப்போது, Olmo and the Seagull எனும் 2015 இல் வெளிவந்த அவருடைய திரைப்படத்தை பற்றி அதிகம் பேசிக் கொண்டனர். அதனால் அத்திரைப்படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது. ஒரு திரைப்பட விழாவின் பயிற்சிப் பட்டறையின் அழைப்பில், Lea Glob எனும் சுவீடன் நாட்டு பெண் இயக்குனருடன் இணைந்து Petro Coasta இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். Olivia எனும் மேடை நாடக பெண் கலைஞரையும், அவரது ஆண் தோழரையும், அவர்களுக்கு பிறக்கப் போகும் பிள்ளையையும் பற்றியது இந்த ஆவணத் திரைப்படம். ஆனால் ஏன் இது ஆவணத் திரைப்படம் எனில், இதில் Olivia உண்மையில் கர்ப்பிணியாக இருந்த 10 மாதங்களிலும், அவரது வலி, வேதனையை சுற்றியும், அவருக்கும் அவருடைய தோழருக்கும் உண்மையில் ஏற்படும் ஊடல்களையும் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அது. எப்படி அவர் மேடை நாடகத்தில் நடிக்கும் சித்தப்பிரம்மை ஏறும் கதாபாத்திரமாகவே நிஜத்தில் மாறுகிறார் என்பதனை அலசுகிறது இத்திரைப்படம்.

இதில் எது உண்மை, எது புனைவு என்பதனை இலகுவில் கணிக்க முடியாது. 82 நிமிடம் கொண்ட இந்த ஆவணத் திரைப்படம் Dafilms.com எனும் செக்குவோஸ்லாவிய ஆவண இணையத்தளத்தில் இலவசமாக பார்க்கலாம். ஒரே ஒரு விதிமுறையுடன். நீங்கள் எவருடனும் இத்திரைப்படத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரமிருந்தால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பாருங்கள். நான் சொல்லும் Petra Coasta, பிரேசிலின் புதிய நம்பிக்கை நட்சத்திர சினிமா இயக்குனர் என்பதனை நீங்களும் வழிமொழிவீர்கள்.

Tunnel (சுரங்கம்)

ஒரு கர்ப்பிணிப் பெண் தனது சொந்தக் குழந்தையின் பிறப்புக்காக எவ்வளவு தூரம் தியாகம் செய்கிறாள். அல்லது அவ்வளவு தூரம் தியாகம் செய்ய வேண்டுமா? எப்படி வயிற்றில் வளரும் ஒரு குழந்தை தன் தொழிலை, தன் வாழ்க்கை, சமூகத்துடனான தனது தொடர்பை என அனைத்தையும், பலவீனமாக்கி, உடைத்து, தனிமைப்படுத்தமுடியும் என பல ஆழமான கேள்விகள் இத்திரைப்படத்தில் எழுப்பப்படும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வலி, வேதனை, அவஸ்தையை, அவள் கணவனோ, ஆண் தோழனோ எவ்வளவு நெருங்கியிருந்து கவனிக்க முயற்சித்தாலும், புரிந்து கொள்ள நினைத்தாலும் அவற்றைவிட அது புரிந்துகொள்ள கடினமானது என்பதனை இந்த 90 நிமிட திரைப்படம், எந்தவொரு வன்முறை காட்சிகளும் இன்றியே சொல்லி முடிக்கும்.

The Seagull எனப்படுவது Anton Chekov எனும் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரின் மேடை நாடக காவியம். இதில் Arkadina என்பவர் வயதாகும் ஒரு நடிகை. Nina என்பவர் சித்தப்பிரம்மையில் விழும் நடிகை. இருவரையுமே Olivia தன்னுள் காண்பார். Olmo and the Seagull திரைப்படத்தை நீங்கள் பார்த்து முடிக்கையில், எது நிஜம், எது புனைவு, சினிமாவுக்காக எந்தளவு தூரம் ஒன்றை தியாகம் செய்யலாம் எனும் பல ஆழமான கேள்விகள் உங்களுக்குள் எழும். அதற்கான பதில்களும் இத்திரைப்படத்திலேயே இருக்கும். நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் இருக்கும் மெல்லிய கோட்டை முடிந்தால் இந்த திரைப்படத்தின் ஊடாக கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

படத்திற்கான இணைப்பு : https://dafilms.com/film/11069-olmo-and-the-seagull

- 4தமிழ்மீடியாவிற்காக: ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula