"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.
நேற்று இரவு (05.08.2020) இதன் ஆரம்ப நிகழ்வுகள், லோகார்னோ கிரான்ரெக்ஸ் திரையரங்கில், உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15 வரை 121 படங்கள் திரையரங்களிலும், இணையத்திலுமாக வெளியிடப்படவுள்ளன.
நிகழ்வினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த திரைப்படவிழாக் குழுவின் தலைவர் மார்க்கோ சொலாரி " லோகார்னோ திரைப்படவிழாவின் 2020 ம் ஆண்டுக்கான 73வது பதிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இது தொற்றுநோய் காரணமாக சுகாதார அவசரத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டிய ஒரு நிகழ்வு அமைந்துள்ளது. எனவே, 73 வது பதிப்பின் தொடக்க விழா கிரான்ரெக்ஸ் மண்டபத்துள், பாதுகாப்பு இடைவெளிகள் மற்றும் முகமூடிகளுடன், மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. லோகார்னோவின் பியாஸ்ஸா கிராண்டேயில் இந்த ஆண்டு ஒரு நினைவகம் மட்டுமே. இன்றிரவு ஆரம்பமாகும்2020 பதிப்பானது " For the Future of Films " சினிமாக்களின் எதிர்காலத்திற்காக என்ற தலைப்பில் இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை 121 படங்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு பதிப்பாகும், இது பார்வையாளர்களின் வீடுகளிலும் நுழையும். உண்மையில், 83 திரையிடல்கள் வீட்டிலிருந்து, ஸ்ட்ரீமிங்கிலும் அணுகப்படும்." என்றார்.
வருடந்தோறும் ஆகஸ்ட்மாதம் நடைபெறும் சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு பகுப்புக்களில், பத்துக்கும் மேற்பட்ட திரையரங்கு, மற்றும் பியாற்சாகிரான்டே பெருமுற்றத் திறந்தவெளித் திரையரங்கு என்பவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 121 திரைப்படைப்புக்களை மட்டுமே வெளியிடப்படுகின்றன. இவற்றில் 83 திரைப்படைப்புக்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் இணையவெளியில், இலத்திரனியல் பொறிகளின் வழியே, எதிர்வரும் 15ந் திகதி வரை பார்க்க முடியும்.
தினமும் 8000 முதல் 12000 பேர் வரையில் பியாற்சகிரான்டே பெருமுற்றத்தில் கூடி, " லாகோ மஜோரே" ஏரி தழுவிவரும் இதமான காற்றினை ஸ்பரிசித்தவாறு, உலகின் பிரமாண்ட திறந்தவெளித்திரையில், உலகின் சிறந்த சினிமாக்களின் முதற்காட்சிகளை காணும் வாய்ப்பினை, கொரோனா கோவிட்-19 பெருந்தொற்று கொள்ளையிட்டதனால், பியாற்சாகிரான்டே பெருமுற்றம், பெருந்திரையும், சினிமாவை நேசிக்கும் பெருங்கூட்டமுமின்றி, நினைவுகளை மட்டும் தாங்கி வெறிச்சோடிக் கிடக்கின்றது.
ஆனால் லோகார்னோவின் பெருந்திரையிலும், திரையரங்குகளிலும், காட்சிகள் ஆரம்பமாகுமுன் உறுமிக் கடக்கும்" வேங்கைபுலி " இம்முறை வீடுகளுக்குள் உறுமிச் செல்வதும் ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
இணையத்தில் திரைப்படங்கள் காண பின்வரும் இணைப்பில் அழுத்துக; https://www.locarnofestival.ch/LFF/home.html
சர்வதேச திரைப்படவிழா ஆரம்ப நிகழ்வுகள்
- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து மலைநாடான்.