சுவிற்சர்லாந்து லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 77வது பதிப்பு ஆகஸ்ட் 07ந் திகதி புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இந்த பிரமாண்டத் திரைத்திருவிழாவின் நான்காம் நாளாகிய நேற்று சனிக்கிழமை, இந்திய சூப்பர் ஸ்டாரும், உலகளாவிய கவனம் பெற்றிருக்கும் இந்திய நடிகருமான ஷாருக்கானுக்கு, தொழில் சாதனைக்காக வழங்கப்பெறும் விருதான, மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera) கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
லோகார்னோ திரைப்பட விழாவின் பங்காளர்களில் ஒருவரான அஸ்கோனா-லோகார்னோ சுற்றுலா அமைப்பின் ஆதரவில் வழங்கப்படும் பார்டோ அல்லா கேரியரா விருது உலகின் பிரமாண்டத் திறந்தவெளித் திரைமுற்றமான பியாற்சா கிரான்டே (Piazza Grande) பெருமுற்றத்தில் ஆகஸ்ட் 10 சனிக்கிழமை இரவு வழங்கப்பட்ட போது, பியாற்சா கிரான்டே பெருமுற்றம் முற்றிலுமாக 8000 க்கும் அதிகமான பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. அதிகளவிலான இந்தியமக்களை நேற்றைய தினம் பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் காணவும் முடிந்தது.
விருதினைப் பெற்றுக் கொண்ட சாருஹான், மிகச் சுருக்கமான தன்து உரையில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அதேவேளை அவரது உரையில் வழமையாக வரும் எள்ளல்களும் இருந்தன. ஆனாலும் லொகார்னோ திரைப்பட விழா ரசிகர்கள் அறிவார்ந்தவர்கள். அதனால் நாம் அமைதியாக நடந்து கொள்வது நல்லது எனவும் தனது ரசிகர்களுக்குச் சொன்னார்.
இன்று 11 ந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சாருக்கானுடனான உரையாடலும், இரவு 10 மணிக்கு, சாருக்ஹானின் தொழில் வாழ்க்கையின் முக்கியப் படமான, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் 2002 வெளிவந்த தேவதாஸ் படத்தின் திரையிடலும் இடம்பெறுகிறது.
- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.
படங்கள் : Locarno Film Festival / Ti-Press
சாருஹானுடனான உரையாடல் நேரலையை கீழுள்ள இணைப்பில் காணலாம். ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு காணலாம்.