free website hit counter

மிதக்கும் நகரம் வெனிஸில் Little Jaffna 

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மிதக்கும் நகரம் எனப் பெருமையுற்ற வெனிஸ் நகரத்தில் லிட்டில் ஜப்னா (Little Jaffna) ஆச்சரியமாக இருக்கிறதா?. ஆச்சரியம் மட்டுமல்ல அளவற்ற மகிழ்ச்சியும் தரக் கூடிய செய்தி இது. 

வெனிஸில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவிற்கு  மிக நீண்ட வரலாறுண்டு. 81 வருடங்களாக நடைபெற்று வரும், உலகின்  முதன்மையான திரைப்பட விழா எனும் பெருமையும் வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவிற்கு  உண்டு. இத்தகைய பெருமைக்குரிய சர்வதேசத்திரைப்படவிழாவில்,  இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தாத, இலங்கைப் பூர்வீகத்துடன் கூடிய ஒரு புலம்பெயர் தேசத்து தமிழ் இயக்குனர் உருவாக்கிய முழுநீளத் திரைப்படம் எனும் பெருமையுடன் லாரென்ஸின் « Little Jaffna » முதற் திரையிடல் கண்டது.  

வெனிஸ் திரைப்பட படவிழாவின் திரை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களால் கௌரவிக்கப்படும் மிக சிறந்த புதிய திரைப்படங்கள் பிரிவான  (Venice International Film Critics’ Week) ல் இத்திரைப்படம் தெரிவானது அதனிலும் சிறப்பானது. வெனிஸின் இந்த தெரிவு திறந்துவிடும் சினிமா திரைப்பயணமும் அது சென்று கொண்டு சேர்க்க கூடிய அடுத்த இலக்கும் மிக மிக நீண்டது என்பது நிச்சயம்.  சமகாலத்தில் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் இத் திரைப்படம் அடுத்து ஐரோப்பாவின்  மிக பிரமாண்ட திரைப்பட விழாக்களுக்களுக்குள் பயணிக்கவுள்ளது (உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள்  இன்னமும் அறிவிக்கப்படாததால், இங்கு குறிப்பிடமுடியாதுள்ளது). 

வெனிஸ் திரைப்பட விழாவில், லாரென்ஸ் வலெனின் « Little Jaffna » திரைப்படம்  உலக முதற் காட்சியாகக் (Premiere Mondiale) காணக்கிடைத்தது.  Little Jaffna திரைப்படமும் இயக்குனராக லாரென்ஸ் வலெனின் புது வரவும், புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கான புதிய சினிமாவையும் கதைக்களங்களையும் தொடங்கி வைக்கிறதெனக் கருதலாம். 

புலம்பெயர் சினிமாக்களத்தில்  சில வருடங்களின் நெருக்கமான நண்பர் லாரென்ஸ். அவர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த கடைசி குறுந்திரைப்படம் « Doosra ». அது நான் இயக்கிய முதல் புனைவுக் குறுந்திரைப்படம். அப்போதிருந்தே நன்கு நெருங்கிய அறிமுகம். Little Jaffna படத்தின் Scenario ஏற்கனவே எனக்கு பரீட்சயமானது. அதை எழுதிக் கொண்டிருந்த காலத்திலேயே அதனையொட்டிய அபிப்பிராயங்களை பகிர்வதற்காக பல மணி நேரம் இருவரும் கதைத்துள்ளோம். இப்போது படம் வெளிவந்து நான் அதை பார்த்துக் கொண்டிருந்த போது,  படத்தின் மிக ஆழமாக உணர்வுகளை தொடும் காட்சிகளும் அவை செல்லக் கூடிய உயரமும் முன்கூட்டியே  ஊகிக்க முடிந்து  என்பதனால்,  அதன் Screenplay முதலிலேயே எனக்குத் தெரிந்ததற்கு வருத்தப்பட்டேன். 

பாரீஸின் மிக நலிந்த குடியிருப்பு பகுதிகளில், பிறந்து வளர்ந்த  இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர்களிடமும், யுவதிகளிடமும், இலங்கையின் இறுதி யுத்தக்காலம் ஏற்படுத்தியிருக்க கூடிய தாக்கத்திலிருந்து எழுந்தது பிரதான கதை. லாரென்ஸும் இதே பாரிஸில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழ் இளைஞர். 

அவருடைய  சினிமா உலகத்தின் (universe), இக்குடியிருப்பு பகுதிகளில் வளரும் இளைஞர் யுவதிகள், தங்களது பெற்றோரையோ, நெருக்கமானவர்களையோ,  இப்போரில் இழந்து அநாதைகளாகவே பாரிஸில் வளர்ந்தால், அல்லத் தமிழர் அல்லாத ஐரோப்பிய பூர்வீக வெள்ளை இனத்தவர்களால் அவர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அல்லது இறுதியுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு சட்டவிரோதமாக இங்கிருந்து மிகப்பெரும் பணம் அனுப்ப முற்பட்டிருந்தால், அதை தடுப்பதற்கோ, கண்டுபிடிப்பதற்கோ, பிரெஞ்சு புலனாய்வினால் ஒரு தமிழர் இரகசியமாக அனுப்பட்டிருந்தால், அவர் எதுவரை சென்றிருக்க முடிந்திருக்கும் எனும் கற்பனை விம்பத்தின் காட்சிப் பரிமாணமே திரைக்கதை. 

 இக்கதைகளுக்குள், ஒரு பிரெஞ்சு, மேற்குலக காவல்துறை திரில்ரையும், தென்னிந்திய காமர்ஷியல் வகை இசை, சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்பட வகையையும் இனைத்து புதிய ஒரு உலகை படைத்தால் எப்படி இருக்கும் என்பதனை லாரென்ஸின் « Little Jaffna » திரைப்படத்தை பார்க்கும் போது உணர்வீர்கள். 

இந்தப் படம் உருவாக்ககூடிய, புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியலை பற்றிய "சில" Stereotype காட்சிகளையும், அதன் ஆபத்தையும் தவிர்த்து, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்கிருந்து இப்படித்தான் பணம் சேர்த்து அனுப்பப்பட்டது எனும் "பொதுவாக" எடுத்துக் கொள்ளக் கூடும் ஒரு விம்பத்தையும்  தவிர்த்து பார்த்தால், படத்தின் பிரமாண்ட காட்சிகளையும், திரில்லர் வகையில், இருக்கையின் நுணியிலேயே உங்களை அமர்த்திவைத்திருக்கும் விறுவிறுப்பான காட்சி நகர்வுகளையும் தைரியமாக மெச்சலாம். 

புலம்பெயர் இலங்கைத் தமிழரின் சினிமாக்கள் எப்படி இருக்கலாம் என்பதற்கு நல்லதொரு தொடக்கமாக ஒரு Cult ஆக உருவாக்குவதற்கான அனைத்து தகுதிகளும் இப்படத்திற்கு இருக்கிறது. இந்த படத்தில் நான் எதுவும் நேரடியாக பணிபுரியவில்லை. இதன் Screenplay எழுத்தாக்கத்தின் போது எனக்கு தெரிந்த புரிகின்ற விமர்சங்களையும், கருத்துக்களையும் மட்டும் பேச்சு உரையாடலில் முன்வைத்திருந்தேன். 

 இப்படத்திற்காக நான் இப்போது எழுதும் இந்த விமர்சனம் நடுநிலையாக இல்லாதிருக்கலாம். ஆனால் இப்படத்தின் பல காட்சிகள் என்னை கண்கலங்க வைத்ததும், லாரென்ஸ் எனும் தனிமனிதனால், தனது தமிழ் அல்லாத ஐரோப்பிய தொழிநுட்ப கலைஞர்களையும், கமெரா முன்னால் பெரிதாக நடித்து அனுபவம் இல்லாத, பிரான்ஸில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த தனது சக தமிழ்க்கலைஞர்களையும், இணைத்து,  இவ்வளவு தூரத்திற்கு மிக நேர்த்தியாக தனது பாணியில் கதை சொல்லும் துணிச்சலுக்காக தலைவணங்கலாம். 

இப்படத்தில்   தென்னிந்தியக் கலைஞர்களான, ராதிகா சரத்குமார், வேல. ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் பங்காற்றியிருந்தார்கள். எழுத்தாளரும் நடிகருமான வேல. ராமமூர்த்தி தனது சமூகவலைப்பகத்தில், இத் திரைப்படம் குறித்துப் பகிர்கையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், தமிழ் மற்றும் ஃப்ரெஞ்ச் மொழிகளில் உருவான, Little affna திரைப்படத்தில், ஐயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் 38 நாட்கள் நான் நடித்துள்ளேன். இத்திரைப்படம்,  ஈழ விடுதலை யுத்தப் பின்னணியில், சப்தமில்லாமல் ஒரு சாதனை என பகிர்ந்துள்ளார்.

தனிப்பட்ட வகையில் நான் முன்வைக்க கூடிய வேண்டுகோள் ஒன்று மாத்திரமே. இந்தியா அல்லாத புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்து தேசங்களிலும், இப்படத்தின் விளம்பரம், உங்கள் கண்களில் தென்பட்டாலோ, காதுகளுக்கு எட்டினாலோ,  நீங்கள் வாழும் நிலங்களுக்கு அருகில் எங்காவது இந்த படம் திரைக்காட்சிகளாக, திரைப்பட விழா காட்சிகளாக விரிவது கேள்விப்பட்டால் சென்று பாருங்கள். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடமும் சொல்லி அழைத்து செல்லுங்கள். 

புலம்பெயர் தமிழ்சினிமா குறித்து இன்னும் சில விடயங்களை உங்களிடம் சொல்ல விரும்புகின்றேன். படங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்கள் தனிப்பட்டவை. ஆனால் முதலில் பார்க்கத் தொடங்குங்கள். அதற்கான நேரத்தையும், சிறிய பண முதலீட்டையும் செய்யுங்கள். ஐரோப்பிய தமிழரல்லாத  மேற்குலக பிரமாண்ட சினிமாக்கள் மத்தியில் நின்று படைப்பாளிகளாக போட்டி போடுகின்றோம். அதற்கு மத்தியில் எமக்கான அடையாளத்தையும், ஆதரவையும் முதலில் எங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் தான் நாளை புதிய இளந்தலைமுறைகலைஞர்கள் இந்த உலகுகளுக்குள் நுழைய முடியும். சினிமாவை நம்பிக்கையான தொழிலாக  மாற்ற முடியும்.

இவ்வாறு சொல்வதற்கான முக்கிய காரணம் ஏதெனெனில் நம் படைப்புக்களுக்கு முதலீடு செய்வததற்கான பண ஆளுமையும், பின்புலமும் இன்னமும் தமிழர் அல்லாத வேற்று இனத்தவரிடமே இருக்கிறது. அவர்களிடம் இப்படங்களுக்கான ஆதரவு குறித்த புரிதல் சரியாக இருக்கவேண்டுமெனில் நீங்கள் சென்று பார்க்க வேண்டும்.

இந்திய வணிக சினிமாக்களின் பாட்டுக்களினதும், ஹீரோயிசத்தினதும், சண்டைக்காட்சிகளினதும் பாதிப்பிலிருந்து மீளத் துடிக்கும், மாற்றுச் சினிமாக்களை பார்க்க நினைக்கும் இந்தியத் தமிழர்களிடம் வைக்கும் வேண்டுகோள் இன்னும் சற்று வித்தியாசமானது. 

உங்களது சினிமா குறித்த ஆழ்ந்த புரிதலை அதிகப்படுத்துவதற்கு, லாரென்ஸ் போன்றவர்களின் சினிமாக்களை பாருங்கள். ஆச்சரியமும், புதிய உற்சாகத்தையும், புலம்பெயர் கலைஞர்கள் சினிமாக்களின் மீதான புரிதலை எப்படி பார்க்கின்றனர் எனும் புதிய சுவாசத்தை நீங்கள் ஆழ உள்ளிழுக்க முடியும். சிறுபான்மை இனங்களின் கலைப்படைப்புக்களுக்கான உங்கள் ஆதரவும், அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதையும் நீங்கள் உறுதிப்படுத்துவதால் மாத்திரமே நல்லதொரு மாற்றங்களுடன் கூடிய இந்திய சினிமாவும் உருவாக முடியும்.

- 4தமிழ்மீடியாவுக்காக வெனிஸிலிருந்து ஸாரா 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula