லொகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 75 ஆண்டு நிறைவில் தங்கச் சிறுத்தை விருதினை வென்றது இயக்குனர் ஜூலியா முராத் நெறியாள்கையில் வந்த ரெக்ரா 34 (Regra 34).
சுவிற்சர்லாந்தின் லொகார்னோ நகரில், ஆகஸ்ட் 3 முதல் பியாஸ்ஸா கிராண்டே பெருமுற்றம் மற்றும் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் 471 திரையிடல்களில் 226 படங்கள் காண்பிக்கப்பெற்றன. இத் திரைப்படவிழாவின் இவ்வருடப் பதிப்பில் சிறப்புக்களில் ஒன்றெனக் கருதக்கூடியது, இந்தியப் படைப்பாளி கீதாஞ்சலி ராவின் கவிதை அனிமேஷனுக்குஇளம் பங்கேற்பாளர்கள் மேடையில் சேர்ந்து விருது வழங்கியமை.
இம்முறை சர்வதேச நீளப்படங்களின் வரிசையில் போட்டியிட்ட படங்களில், பிரேசிலில் இருந்து வந்த "ரெக்ரா 34" எனும் படம் தங்கச் சிறுத்தை விருதினை வென்றுள்ளது. "உலக சினிமா வரலாற்றில் முக்கியப் பக்கங்களை எழுதிய பிரேசில் போன்ற சினிமாவுக்கு தங்கச் சிறுத்தை முக்கியமானது. தைரியமான மற்றும் முக்கியமான உடல் அரசியல் பேசும் இத்திரைப்படத்துக்கான விருது பொருத்தமானது " என விழாவின் கலைஇயக்குனர் ஜியோனா ஏ. நசாரோ குறிப்பிடுகின்றார்.
இதேவேளை பியாஸ்ஸா கிராண்டே பெருந்திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படங்களில் இருந்து, பொது மக்கள் தெரிவாக, டெல்ஃபின் லெஹரிசியின் கடைசி நடனம் Last Dance திரைப்படம் பியாஸ்ஸா கிராண்டே பார்வையாளர் விருதை வென்றது. அதே நேரத்தில் பிளாண்டின் லெனோயரின் வரலாற்று நாடகமான அன்னி கோலர் Annie Colère மதிப்புமிக்க அமெரிக்க பத்திரிகையின் விருதை வென்றது.
லோகார்னோ திரைப்பட விழாவின் பார்வையாளர்களால் தெரிவு செய்யப்பெற்ற டெல்ஃபின் லெஹெரிசியின் கடைசி நடனம், வாழ்க்கையின் எந்த வயதிலும் சுதந்திர உணர்வுடன் இருங்கள் என்பதை லியுறுத்திய கதை. விருது பெற்ற மற்றைய படமான அன்னி கோலர் பெண்ணியம் கருக்கலைப்பு உரிமைக்கான பெண்களின் கோபம், ஆனால் மென்மை நிறைந்த போராட்டத்தின் வெளிப்பாடாக அமைந்த சித்திரம்.
ஆக மொத்தத்தில் இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப'படவிழாவினை அதிக பெண் இயக்குனர்கள் வென்றிருக்கின்றார்கள் எனச் சொல்லும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Photos : ©Locarno Film Festival / Ti-press.