free website hit counter

பெரு முற்றத்தை அலங்கரித்த மத்திய கிழக்கு சினிமா !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ திரைப்பட விழாவின் 3ம் 4ம் நாள் திரைக்காட்சிகளில் பியாற்சே கிராண்டே பெருமுற்றத்தில் காண்பிக்கப்பட்ட Bassel Ghandour இன் The Alleyess திரைப்படம் ஒரு வித்தியாசமான காட்சி அனுபவம். மத்திய கிழக்கு நாடுகளின் சினிமா மீதான ஐரோப்பிய பார்வையை மாற்றி அமைத்த ஒரு திரைப்படம்.

லொகார்னோ பியாற்சே கிராண்டே பெரு முற்றத்திற்கு இப்படியான திரைப்படங்கள் புதுவரவு. சிரிப்பு, அழுகை, பயம், வன்முறை என அனைத்து உணர்வுகளையும் காண்பிக்கும் ஒரு காமர்ஷியல் புனைவுத் திரைப்படம். ஜோர்டானில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இளம் பருவ திருட்டுத்தனக் காதல், எதிர்க்கும் ஓர்தொடொக்ஸ் தாய், வெளிநாட்டவர்களுக்கு பாலியல் விபச்சாரம், போதைப் பொருட்கள் இரகசிய விற்பனை செய்யும் கதாநாயகன், அந்த ஊரில் அனைவருடனும் மிரட்டிப் பணம் பறிக்கும் ஊர் தாதா. இவர்களை சுற்றி நகரும் கதை.

தனது மகளின் இரகசியக் காதலை மொட்டைமாடியிலிருந்து ஒருவன் படம்பிடித்து அவள் தாயிடம் அனுப்பி மிரட்டிப் பணம் கேட்க, அந்த ஊர் தாதாவிடம் செல்கிறாள் தாய். அவள் போடும் புதிய ஒப்பந்தம் எப்படி எல்லோருடைய வாழ்க்கையும் புரட்டிப் போடுகிறது என்பதே கதை. இந்திய காமர்ஷியல் படங்களில் உள்ள அதே தாதா வன்முறை, ஆணாதிக்கம், கலாச்சாரப் போர்வையில் கட்டுப்பாடும், கலாச்சார சுதந்திரப் போர்வையில் சீரழிவும் என அனைத்தும் இந்த படத்திலும் இருக்கிறது. ஆனால் எந்தவொரு தனி அரசியல் நிகழ்வுகளையும், சட்டவிதிமுறைகளையும் குற்றம் சாட்டி எடுக்கப்பட்டதல்ல. அதனாலேயே படத்தின் வெற்றியும், இயக்குனரின் அடையாளமும் முன்கூட்டியே பெரிதும் பேசப்பட்டிருந்தன. அதற்கேற்ற கமெரா ஒளிப்பதிவும், இசையும், நடிப்பும் படத்தின் வெற்றியை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

குறுந்திரைப்படப் பிரிவில் …

லொகார்னோ திரைப்பட விழாவின் குறுந்திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில் தனிநபர் அடையாளம் எனும் தொகுப்பில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படங்களில் ஈரானிய குறுந்திரைப்படம் Mask ஒரு ஆச்சரியமான முயற்சி.

Nava Rezvani இயக்கத்தில் உருவான இக்குறுந் திரைப்படம், தனது காதலனின் ஆசைக்காக, உதட்டை சத்திரசிகிச்சை மூலம் பெருப்பித்த ஒரு பெண்ணைச் சுற்றி நகர்கிறது.

காதலுனுக்கு அது பிடிக்காது போக, அவள் பணிபுரியும் முக அலங்கார நிலையத்தில் எப்படி சக ஊழியர்களையும், அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் எதிர்கொள்கிறாள், அவள் புதிய அடையாளம் என்ன என சொல்லும் ரியாலிஸ்டிக் கதைகளம். பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்ணின் உதடு உண்மையிலேயே சத்திரசிகிச்சை மூலம் பெருப்பிக்கப்பட்டது போல் அவ்வளவு உண்மையான பிரதிபலிப்பு.

The Sunset Special எனும் Nicolas Gebbe இன் திரைப்படம் ஒரு பரீட்சார்த்த அனிமேஷன் திரைப்படம். ஒரு உல்லாச சுற்றுலா நகருக்கு செல்லும் கதாநாயகனை 1990 களில் வெளிவந்த வீடியோ கேம் போன்ற காட்சி அமைப்புக்களுடனும், Google Traslation இல் வருவது போன்ற இயந்திர ஒலியுடன் கூடிய வசன உரையாடல்களுடனும் கொண்டு உருவாக்கபட்ட மெல்லிய நகைச்சுவை படம். யூடியூப் மற்றும் Instagram இல் கண்டெடுக்கப்பட்ட Found Footage களை 3D Graphics வடிவங்களுடன் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் எமது luxery ஆடம்பர வாழ்க்கையையும் நாம் செல்லும் உல்லாச சுற்றுலாத் தளங்களையும் நையாண்டியாக கேலி செய்கிறது.

இன்னுமொரு குறுந்திரைப்பட பிரிவில், எம்மைச் சுற்றியிருக்கும் உயிரற்ற சடப்பொருட்களாக இருக்கும் கதிரை, மேசை, வீட்டுக் கூரை, பியானோ இசைக்கருவியின் நோட்புக் வைக்கும் தளம் என பலவற்றை காதலித்து திருமணம் செய்து கொண்ட இரு பெண்களை பற்றிய ஆவணத் திரைப்படத்தை காணக்கிடைத்தது. எமக்கு பார்க்கையில் நகைச்சுவையை அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் நிஜமாகவே ஆழமான காதலை அந்த பொருட்களுடன் வெளிப்படுத்துகிறார்கள். சூரிச் கலைக்கல்லூரி மாணவராக் உருவாக்கப்பட்ட இந்த ஆவணக் குறுந்திரைப்படமும் போட்டிப்பிரிவில் நல்லதொரு புதுவரவு.

காணவிரும்பி தவறவிட்ட திரைப்படம்

நேற்று பியாற்சே கிராண்டே திறந்த வெளி திரையரங்கில் திரையிடப்பட்ட இரண்டாவது திரைப்படம் Gasper Noe வின் Vortex. படத்தின் திரையிடல் காட்சி நள்ளிரவு 12 மணிக்கே காண்பிக்கப்பட்டதால் காண முடியாமல் போய்விடினும் இதை பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன்.

Gasper Noe புகழ்பெற்ற ஆர்ஜெண்டீனிய பிரெஞ்சு இயக்குனர். இவருடைய Love, Climax, Enter the Void திரைப்படங்கள் சிலவேளை நீங்கள் தெரிந்திருக்கலாம். பெரும்பாலானவை அடிக்கடி கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தெரிவாகும் திரைப்படங்கள்.

Vortex திரைப்படம் கோவிட் காலத்தில் கடந்த வருடம் நான்கு மாதங்கள், எழுதி, படம்பிடித்து, படத்தொகுப்பு செய்யப்பட்ட திரைப்படம்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இம்முறை தெரிவாகி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இயக்குனருக்கு ஏற்பட திடீர் மூளை சம்பந்தப்பட்ட உயிரச்சுறுத்தும் நோய் அனுபவத்தை அடைப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வெறும் 10 பக்கங்கள். மூன்று வயதான நடிகர்களை கொண்டு முழுவதும் ஒரு வீட்டினுள் படம்பிடிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் improvise செய்யப்பட்டு இரு camera க்களினால் படம்பிடிக்கப்பட்டவை.

 - 4தமிழ்மீடியாவுக்காக : லொகார்னோவிலிருந்து ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula