மலையாள இலக்கியத்தில் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது. ஓ.என்.வி.அறக்கட்டளைக்கு தற்போது மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமைப் பாதுகாவலராக உள்ளார்.
நிரந்தரத் தலைவராக மலையாள சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ள மலையாளத் திரையுலகில் மிக உன்னதமான திரைக்கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், மூத்த மலையாளப் பெண் கவியும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் பெண்ணியவாதியுமான சுகந்த குமாரி, பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் ஆகிய மூன்று முக்கிய ஆளூமைகள் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளைக்கு இம்முறை அவர்களே நடுவர்களாக இருந்து ஓ.என்.வி விருதுக்கு தகுதி உடையவராக வைரமுத்துவை தேர்ந்தெடுத்துள்ளனர்.
எல்லாம் சரி. யார் இந்த ஓ.என்.வி. எனும் கேள்வி எழுகிறது அல்லவா? கேரளா நவீன இலக்கியத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற மலையாளக் கவிஞர்தான் ஓ.என்.வி. குறுப்பு. கவிதைகளோடு நின்றுவிடாமல் மிகச்சிறந்த திரைப்படப் பாடலாசிரியராக புகழ்பெற்றவர். சுமார் 5 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். 2007-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவில் உயரிய இலக்கிய விருதால கருதப்படும் ஞான பீட விருது பெற்றவர். இவரது கவிதைகள் 20-க்கும் மேற்பட்ட தொகுப்புகளாக வெளிவந்துள்ளனர். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாடெமி விருது, சாகித்ய அகாடெமி விருது, வயலார் ரவிவர்மா விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இவரது நினைவால் இடதுசாரி கம்ப்யூனிஸ்ட் இயக்கங்கள் சேர்ந்து உருவாக்கியதே ஓ.என்.வி. விருது. காரணம் தன்னுடைய படைப்புகளில் ஓ.என்.வி தன்னை ஒரு இடதுசாரி படைப்பாளியாக அடையாளம் காட்டினார்.
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை