தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய வங்கியொன்றைத் தொடங்கியிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடைசியாக ‘ஆச்சார்யா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வந்தார்.
அதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். கோரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இதுவொரு பக்கம் இருக்க, கொரோனா பெருந்தொற்றில் மக்களுக்கு தன் சக்திக்கு ஏற்ற உதவியை அவ்வப்போது வழங்கி வருகிறார். ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் பல பகுதிகளில் ரத்த சேமிப்பு வங்கி நடத்தி வரும் இவர், தற்போது தனது மகனுடன் இணைந்து ஆக்சிஜன் சிலிண்டர் வங்கிகளை தொடங்கி நடத்திவருகிறார்.
நேற்று தெலுங்கானா மாநிலத்தின் தலை நகரான ஐதராபாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வங்கியை தொடங்கி வைத்த அவர், “நானும் எனது மகன் ராம்சரணும் இணைந்து இந்த உயிர்காக்கும் முயற்சியில் முடிந்த அளவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும் ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் திரட்டியிருக்கிறோம். இவை இப்போது அதிகமாக தேவைப்படும் குண்டூர் மற்றும் நெல்லூர் மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இன்னும் அதிக தேவையான இடங்கள் எவை என அறிந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் அங்கும் அனுப்பி வைக்க வேலைகள் செய்துக்கொண்டிருக்கிறோம். ரத்த வங்கி போல இன்று ஆக்ஸிஜன் வங்கி காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. காற்று இல்லாமல் மனிதன் இறப்பது இயற்கையின் மிகப்பெரிய கொடுமை” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.