ஐரோப்பாவின் முன்னோடியான திரைப்படவிழா எனும் பெருமைக்குரிய பேர்லின் சர்வதேச திரைப்படவிழாவின் 74வது பதிப்பு, பெப்ரவரி 15ந் திகதி முதல் 25 ந் திகதி வரை ஜேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெறுகிறது.
இத் திரைப்படவிழாவில், இயக்குனர் வினோத் ராஜ் நெறியாள்கையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், நடிகர் சூரி நடிக்கும், 'கொட்டுக்காளி' திரைப்படம் Forum பிரிவில் போட்டியிடுகிறது. இதன் முதற்காட்சி பெப்ரவரி 16 ந் திகதி, திரையிடப்படுகிறது. இந்த முதற்காட்சிக்கான சீட்டுக்கள் யாவும் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே விற்பனையாகியுள்ளன. இவ் விழாவில் தொடர்ந்து, பெப்ரவரி 18, 19, 20, 25, ஆகிய திகதிகளிலும் இத் திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இவற்றுக்கான சீட்டுக்கள் விற்பனை இன்னமும் ஆரம்பமாகவில்லை.
பேர்லின் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் ஒரேயொரு முழுநீளத் தமிழ் திரைப்படமாகக் ' கொட்டுக்காளி ' சிறப்புப் பெறுகிறது. இப்படத்தின் இயக்குனர் வினோத்ராஜ், 2021ல் றொட்டடாம் திரைப்படவிழாவின் முக்கிய விருதான டைகர் விருதினை, தனது முதலாவது படமான 'கூழாங்கல் ' படத்திற்காகப் பெற்று சர்வதேசத் திரைப்படவிழாக்களில் தனக்கான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இதனால் அவரது இரண்டாவது படைப்பான 'கொட்டுக்காளி' பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூரி நாயகனாக நடித்த இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை', முக்கியபாத்திரமேற்று நடித்த இயக்குனர் ராமின் ' ஏழுகடல் ஏழு மலை' என்பன றொட்டடாம் திரைப்படவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில், அவரது மற்றுமொரு படமான 'கொட்டுக்காளி' பேர்லின் திரைப்படவிழாவில் பங்கேற்கிறது. ஒரே ஆண்டில் சூரி நடித்த மூன்று திரைப்படங்கள் சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்குபற்றுவதன் மூலம், உலகளாவிய ரீதியில் சாதனை நாயகனாக அறியப்படுகின்றார்.
றொட்டடாம் திரைப்படவிழாவில் சூரி...