நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை கடந்த பிறகும்கூட இன்னும் தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக, இன்றுள்ள இளம் நடிகர்களுக்கு சவால்விட்டு வருகிறார். இவரை வைத்து படம் தயாரிக்க இன்னமும் பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்துக் கிடக்கின்றனர்.
அரசியல் வேண்டாமென்று ஒதுங்கிவிட்ட ரஜினிகாந்த், அடுத்தடுத்து படங்களில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டினார். அவ்வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் அமீர் கான் வில்லன் கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சௌபின் ஷாயிர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், கூலி திரைபடத்தின் வெளியீட்டுத் தேதி, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ளது. அதற்கடுத்த நாள் அதாவது ஆக.15 இந்திய சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.