தாதா சாகேப் பால்கே விருதைத் தவிர இந்தியாவில் உள்ள சிறந்த சினிமா விருதுகள் பலவற்றையும் தன்னுடைய நடிப்புக்காக வாங்கிவிட்டார் மோகன்லால்.
இன்று அவருக்கு 61-வது பிறந்த நாள். போன வருடம் அவர் 60-வது வயதில் அடி வைத்தபோது ‘பரோஸ்’ என்ற பெயரில் குழந்தைகளுக்காக 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் 3டி மேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் படத்தை இயக்கத் தொடங்கினார். இது ஹாரிபாட்டர் போன்ற முயற்சி. தற்போது கொரோனா காரணமாக அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்காக 25 உலகின் பிரபலமான மொழிகளில் டப் செய்ய வேண்டும் என்ற முன்நகர்வுக்காக பல மொழிகளில் உரிய ஆட்களைத் தேர்வு செய்து வருகிறார் மோகன்லால்.
‘லாலேட்டன்’ என்று தென்னிந்திய ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன்லால் நடிகர் என்ற எல்லையுடன் நின்றுவிடாமல், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் பாடகர் என்று திரையுலகில் பல பரிணாமங்களை எடுத்திருக்கிறார். 1980-ஆம் வருடம் வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’என்ற படத்தில் வில்லனாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 20 திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார். அதன்பின்னரே.. 1986-ஆம் வருடம் வெளியான ‘ராஜாவிண்டே மகன்’ படம் அவரைக் கதாநாயகனாக அங்கீகரித்தது. அதன்பிறகு லாலேட்டனின் ஆட்சியும் மம்முக்கா என அழைக்கப்படும் மம்மூட்டியின் ஆட்சியும்தான். இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
மலையாளம் என்கிற எல்லையைக் கடந்து தமிழ், தெலுங்கு, இந்தி என மோகன் லாலின் பயணம் தொடர்கிறது. அவ்வளவு சிறிய மாநிலமான கேரளத்தில் இவருடடை ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’ ஆகிய இரண்டு படங்கள் தலா 150 கோடி வசூல் செய்தன. அவற்றின் சாதனையை விஜய்யின் படங்களால் கூட கேரளத்தில் முறியடிக்க முடியவில்லை.
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை