பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.
இவர் அடிப்படையில் ஊடகத் துறை பட்டதாரி. இதனால் கே.வி.ஆனந்த் தன்னுடைய 'கவண்' படத்தில் டிவி நிருபர் வேடத்தில் நடிக்க வைத்தார். பின்னர் 'கட்டப்பாவ காணோம்', 'வஞ்சகர் உலகம்' படங்களில் துணிந்து வில்லியாகவும் நடித்தார். மேலும் 'தாழம்பூ', 'ரெட்டை ரோஜா' ஆகிய டிவி தொடர்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார்.
தற்போது தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் சின்னத்திரை, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகை சாந்தினி தமிழரசன் தனது சமூகவலைப் பக்கத்தில் கோலிவுட்டில் படப்பிடிப்புகள் நடப்பதைத் தடுக்கும்படி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அவர் தன்னுடைய பதிவில் “முழு ஊரடங்குதானே நடைமுறையில் இருக்க வேண்டும்? பிறகு எப்படி மறைமுகமாகச் சென்னையில் பல படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன? மக்களின் உயிர்தான் எல்லாவற்றையும் விட முக்கியம். நோய்த்தொற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களைக் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”என்று சாந்தினி முதல்வரை டேக் செய்து வேண்டுகோள் வைத்துள்ளார்.
https://twitter.com/