நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வெற்றி பெற்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார்
கடந்த 2017-ஆம் வருடம் ஆரம்பித்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஆரம்பித்த பிறகு இந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. எகிறியது. இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக, ஜூன் மாதம் தொடங்க வேண்டிய நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப் போனது. ஜனவரி மாதம் முடிந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியை தன்னுடைய அரசியல் மேடையாகவும் அவர் பயன்படுத்திக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து வந்த தேர்தலில் மக்கள் அதிக புரிந்துணர்வுடன் வாக்களித்து திமுகவை வெற்றி பெறச் செய்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத கமல், மீண்டும் திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பதுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரவும் ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிகிறது. அதில் சீசன் ஐந்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எந்த அரசியல் நடவடிக்கையையும் செய்யக் கூடாது என்று ஓப்பந்தத்தில் கமல் ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.
இருப்பினும் வழக்கம் போல பிக்பாஸ் போட்டியாளர்கள் யார், யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த மாத கடைசியில் பிக் பாஸ் 5-ஆம் சீசனின் டீசர் வெளியாகலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கான பரப்புரை படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பிரபலமாகி வருகிறது.
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை