ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் நடந்து வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கடந்த 2019-ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இந்த அமைச்சர்கள் பதவி வகிப்பர் என்றும், அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நெருங்குவதால், புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் தீர்மானித்தார். அதன்படி, அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதில், கவுதம் ரெட்டி சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் 24 அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகனிடம் சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து 25 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஆளுநருக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டது. பழைய அமைச்சர்கள் பட்டியலில் இருந்து 10 பேரும், புதிதாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
அமராவதியில் உள்ள தலைமைச் செயலகம் அருகேயுள்ள மைதானத்தில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூஷன் அரிச்சந்திரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர்.கே. ரோஜா புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் முதன்முறை ஆந்திர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். ரோஜா அமைச்சரானதை நகரி தொகுதியில் உள்ள அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ரோஜாவுக்கு மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.