நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ‘இந்தப் படம் கூர்க்கா, மால் காப், செக்யூரிட்டி போன்ற படங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறது’ என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மனி ஹெய்ஸ்ட், வெப் சீரிஸில் வருவது மாதிரியான ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும் இண்டர்நெட்டில் ட்ரோலிங் செய்து கொண்டிருக்கிறார்கள்.
‘சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கெனவே நெல்சன் எடுத்த ‘டாக்டர்’ படம் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான ‘கிருஷ்ணர்ஜூனா யுத்தம்’ என்ற படத்திலிருந்து உருவிய கதைதான். இப்போது வேறு படங்களில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக காட்சிகளை உருவியிருக்கிறார் நெல்சன்’ என்றும் முணுமுணுக்கிறார்கள்.
பீஸ்ட் படத்தில் விஜய் யார் தெரியுமா என்று சொல்லும் பிளாஷ் பேக் காட்சிகளை ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்து ஒருபக்கம் இருக்கட்டும். ‘பீஸ்ட்’ பற்றிய பிரத்யேகச் செய்தியை உங்களுக்குத் தருகிறோம்.‘பீஸ்ட்’ படத்தில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. மாலில் கதை தொடங்கிய சிறிதி நேரத்தில் ‘விஜய் யார் தெரியுமா? என்று கேட்டு செல்வராகவன் விஜயின் பிளாஷ் பேக் காட்சியைச் சொல்லும்விதமாக முதல் பாதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விமானத்தில் பறந்து எதிரிகளை விஜய் துவம்சம் செய்யும் ஆக்ஷன் காட்சிகளை இங்கு 15 நாட்கள் எடுத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பகுதி முழுவதும் பிரம்மாண்ட மால் ஒன்றில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிக்கொண்ட பொதுமக்களில் ஒருவராக இருக்கும் விஜய் அதிரடி சாகசங்கள் மூலம் எப்படி பணையக் கைதிகள் அனைவரையும் காப்பாற்றினார் என்பது. இந்த இரண்டாம் பகுதிக்காக சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஓட்டி உள்ள ஹோட்டல் லீலா பேலஸ் அருகே பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் ஒன்றை 30 கோடி ரூபாய் செலவில் போட்டு அதில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் ஆர்ட் டைரக்டராக கிரண் இருந்தாலும், ஷாப்பிங் மால் செட்டை மும்பையைச் சேர்ந்த ஒரு ஸ்பெஷலிஸ்ட் டீம் உருவாக்கி இருக்கிறது. இதற்காக 30 நாட்கள் எந்தவிதமான இடைவெளியும் விடாமல் தொடர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். மாதக்கணக்கில் நிஜ மாலில் படப்பிடிப்பு நடத்த செய்ய முடியாது என்பதால், ஒரு உண்மையான மாலை போல் இந்த செட்டை உருவாக்கி இருக்கிறார்கள்.
கோரோனா பரவல் அதிகமாக இருந்த நேரத்தில் இந்த செட்டில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதால், செட்டை பராமரிப்பதற்கே கூடுதல் செலவு ஆகியியிருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இந்த மால் செட்டில் பீஸ்ட் படக்குழு, சுமார் 60 நாட்கள் படப்பிடிப்பு நடித்தியிருக்கிறார்கள். படம் வெளியான பிறகு, இந்த செட்டை ரசிகர்கள் பார்வைக்கு விடலாமா இல்லை ஒட்டுமொத்தமாக பிரித்துவிடலாமா என்று தயாரிப்பு நிறுவனமான சன் டிவி தரப்பில் யோசித்து வருகிறார்களாம்!
-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை