காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களுக்குப் பிறகு ஒளிப்பதிவாளர் மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மனநலம் குன்றிய ராமையா என்ற பாத்திரத்திலும் யோகி பாபு கல்யாணி என்ற யானையின் பாகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவசாயத்தை ஒரு தொழிலாகப் பார்க்காமல், ஒரு வாழ்வியலாகப் பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு. இதில் நல்லா ஆண்டியின் நிலத்தை கேட்டு அரசு செய்யும் அதிகார மீறல் கதையாக விவரிக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் நெகிழ்ந்துபோய் படக்குழுவினரைப் பாராட்டிவருகிறார்கள்.
மூத்த இதழாளர் ந.பா.சேதுராமன் படம் குறித்து தன்னுடைய முகநூலில் எழுதியிருப்பதாவது… ‘கடைசிவிவசாயி’ பார்த்தேன். ‘காக்காமுட்டை’ படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் எம்.மணிகண்டனின் படம். விஜய்சேதுபதி, யோகிபாபு தெரிந்த முகங்களாக இருந்தாலும் படத்தில் நிறைய புதுமுகங்கள். கதையின் நாயகன், எண்பது வயதைத் தாண்டிய மாயாண்டி (நல்லாண்டி) தான். நடித்தாரா வாழ்ந்தாரா என்றே பிரித்துப் பார்க்க முடியாது. படம் முடியும் போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் வரிகளைப் படித்தபோது வலித்தது. கதிர் எப்படி முளைக்கிறது, அதைப் பாதுகாப்பது எப்படி என்பதில் தொடங்கி; விவசாயிகளை ஏமாற்றி; நிலங்களை பெரு முதலாளிகளுக்கு கைமாற்றும் உள்ளூர் இடைத்தரகர்கள் வரை; பல முக்கிய விசயங்களை ஆழமாகவும், அழுத்தமாகவும், பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
நெற்பயிர் ஒவ்வொன்றையும் தனித்தனி உயிராகப் பார்க்கும் மாயாண்டி, நம்மையும் அப்படியே பார்க்கும் மனநிலைக்கு மாற்றுவதில் இயக்குநரின் முத்திரை பளிச். பொய் வழக்கில் மாயாண்டியை சிக்கவைக்கும் போலீசார், வெள்ளேந்தியான மாயாண்டியின் பதிலால் கோர்ட்டில்; தலை குனிவதும் இயல்பான – ஆனால் – அழுத்தமான காட்சிகள். மாஜிஸ்திரேட் பாத்திரம் வெகு இயல்பு. நகைச்சுவையை எல்லா பிரேமிலும் கொண்டு வரும் கிராமத்து மக்கள், இப்போதும் கண்முன்னே நிற்கிறார்கள்.' என அவர் பகிர்ந்துள்ளார்.
இதழாளர் பிரபா படம் தனது முகநூலில் கூறியிருப்பதாவது… நடிகர் பாத்திரமாக மாறிவிடுவது ஒரு சில படங்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. உண்மையில் எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் அப்படி நிகழ்ந்த தருணங்கள் மிகச்சில. அதில் ஒன்று கடைசி விவசாயி.அப்படி மாயாண்டி என்ற மனிதராகவே வாழ்ந்திருக்கிறார் நல்லாண்டி என்னும் முதியவர். தொழில்முறை நடிகர்களாய் அல்லாத மனிதர்களை நடிக்க வைப்பது எளிதான காரியமில்லை. இதில் நல்லாண்டி ஏதோ அவர் வீட்டிலும் வயலிலும் இருக்கிறாரே தவிர திரையில் நடிப்பதாகத் தோன்றவே இல்லை. படம் வெளியாகும்போது அவர் உயிருடன் இல்லை என்பது துயரமானது.' என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.