சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். சூர்யா தயாரித்த அந்த படம் பழங்குடியின இருளர் மக்கள் மீது அதிகார வர்க்கம் எப்படி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது அதனால், அந்த எளிய மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள், அதை அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் இத்திரைப்படத்தில் கதாபாத்திரமாக வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கறிஞர் சந்துருவாக நடித்த சூர்யா மக்கள் மனதில் சந்துருவாகவே பதிந்துவிட்டார். இந்தப் படம் வெளியான போது சில எதிர்மறையான விமர்சனங்களைத் தாண்டி பாராட்டை பெற்றது. மொத்தத்தில் ஏகப்பட்ட திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வரும் ஜெய்பீம், சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம் பிடிக்க தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கப்பட்டு, ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் இணையதளத்திலும் படத்தின் காட்சி வெளியானது.
ஆனால், சிறந்த வெளிநாட்டுமொழிப் படத்துக்கான பிரிவில் இப்படம் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான், இந்த ஜெய்பீம் படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியிருந்தது. இதனை சூர்யாவின் ரசிகர்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.