சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.
அதன்பிறகு குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை எனத் தொடர் வெற்றிகளைக் கொடுத்தவர். சுசீந்திரன். சீனு.ராமசாமி உள்பட அன்றுமுதல் இன்றுவரை புதுமுக இயக்குநர்களுக்கு கால்ஷீட் கொடுத்து அவர்களைத் தொடர்ந்து ஆதரிப்பவர். அவரது நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த விஷ்ணு விஷால், அதன்மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாக எண்ணியிருந்தார். ஆனால், அதில் பிரபுசாலமன மண்ணைப் போட்டுவிட்டதாக தற்போது மனம் திறந்து கூறியிருக்கிறார்.
தற்போது விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரித்து, நடித்துள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ என்ற படத்தையோட்டி தேர்ந்தெடுத்த மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘ராட்சசன்’ ரீமேக் உரிமையை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்று ஒரு மூத்த பத்திரிகையாளர் கேட்க அதற்கு விஷ்ணு விஷால் அளித்த பதில் பளிச்சென்று உண்மையை உடைத்தது. அவர் அந்தக் கேள்விக்கு பதிலளித்தபோது: “ராட்சசன் படம் வெளியான பிறகு நான் மற்றும் தெலுங்கு நடிகரான விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘காடன்’. அந்தப் படத்தில் யானையுடன் கஷ்டப்பட்டு நடித்து என்னுடைய மொத்த உழைப்பையும் கொட்டியிருந்தேன். ஆனால், நான் நடித்திருந்த காட்சிகளை, பட ரிலீஸுக்கு 5 நாட்களுக்கு முன்பாக 40 நிமிடத்துக்கு மனசாட்சியில்லாமல் வெட்டித் தள்ளிவிட்டார் படத்தின் இயக்குநர் பிரபுசாலமன். இவ்வளவு உழைத்தோம் இப்படிச் செய்துவிட்டாரே என்று மனமுடைந்துபோனேன்.
அப்போதுதான், ஒரு நடிகனாக எனது முழுமையான திறனை வெளிப்படுத்தவும், நான் பெரிய ஹீரோவாக வளர்ந்துவிட்டதை எடுத்துகாட்டவும் ‘எஃப்.ஐ.ஆர்’கதையைக் கேட்டு படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால். படத்தை உடனே தொடங்க என்னிடம் பணம் இல்லை. இதனால் பாலிவுட் கனவுடன் நான் வாங்கி வைத்திருந்த ‘ராட்சசன்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விற்று, அந்தப் பணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறேன். திருவல்லிகேணியில் பிறந்து வளர்ந்து கெமிக்கல் என்ஜினியரிங் படித்து சொந்தத் தொழில் செய்ய நினைக்கிறான் நாயகன். அவன் மீது பொய் வழக்குப் போடுகிறது போலீஸ். நல்லவன் கோபப்பட்டால் என்ன நடக்கும்? நாயகன் திருப்பி அடிக்கிறான். இதுதான் கதை. படத்தைப் பார்த்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார். மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரைசா வில்சன் என மூன்று கதாநாயகிகள் மூன்று வேறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார்கள் என்கிறார் விஷ்ணு விஷால்!
4தமிழ் மீடியாவுக்காக மாதுமை